

பதின்பருவத்தினர் காணொளிகள் பார்ப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு முதல் முறையாக வெளியிட்டுள்ளது. திறன்பேசிகளில் அழைப்பது, குறுஞ்செய்திகள் அனுப்புவது உள்ளிட்ட கருத்துப் பரிமாற்றச் செயல்களை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, காணொளிகள் காண்பதற்காகப் பதின்பருவத்தினர் செலவிடும் நேரம் அதிவேகமாக அதிகரித்துவருவதாக 2024 நவம்பர் வரை உலகம் முழுவதும் வெளியான அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
காணொளிகளின் உள்ளடக்கம்: காணொளிகள் எந்த வகையைச் சேர்ந்தவையாக இருந்தாலும், எந்தத் தளத்தில், எத்தகைய வழியில் வந்தாலும் அதன் உள்ளடக்கமே பதின்பருவத்தினரை அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகின்றன. பதின்பருவத்தில் எல்லாம் தெரிந்ததுபோல வெளியில் காட்டிக்கொண்டாலும், குழப்பத்துடனும் அவநம்பிக்கையுடனும்தான் அவர்கள் வளருகிறார்கள்.