

உலகப் புகழ்பெற்ற வானியல் அறிஞர் கார்ல் சாகன், ‘நாம் எல்லாரும் நட்சத்திரங்களின் துகள்களே’ என்று குறிப்பிடுவார். அவருடைய கூற்றை நிரூபிக்கும் வகையில், அண்மையில் அறிவியல்பூர்வத் தரவுகள் கிடைத்திருக்கின்றன. பூமியைத் தவிர வேறு கோள்களில் உயிரினங்கள் உண்டா என்பதை அறிய, முதலில் அதற்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் அங்கே இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவது அவசியம். தற்போது கிடைத்திருக்கும் தரவுகள் பூமியில் மட்டும்தான் உயிர்கள் உண்டு என்கிற கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கின்றன.
உயிர்களின் இருப்பிடம்: பூமியில் மட்டும்தான் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் என உயிர்கள் தழைத்து வாழ்கின்றன என்று கருதிவருகிறோம். சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற ஏழு கோள்களில் உயிர்கள் வாழ்ந்து வருவதற்கான சான்றுகள் தற்போது வரை இல்லை என்று கருதப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், சீனா என விண்வெளி ஆய்வில் முன்னணி வகிக்கும் நாடுகள் விண்வெளி குறித்து மேற்கொண்டுவரும் தொடர் ஆய்வுகள் இதைத்தான் உணர்த்துகின்றன.