

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் செயலிகள் அனைத்துக்கும் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் செயற்கை நுண்ணறிவு (AI). பெருநிறுவனங்கள் நினைக்கும் முடிவை நம் மீதே திணித்து, அது சார்ந்த முடிவை நம்மையே எடுக்கவைக்கும் அளவுக்குச் செயற்கை நுண்ணறிவு பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் பல செயலிகள் குறிப்பாக - சமூக வலைதளச் செயலிகள் இலவசமாகவே கிடைக்கின்றன.
ஆனால், நீங்கள் தினமும் உருவாக்கும் தகவல்கள், ஒளிப்படங்கள், காணொளிகளைச் சேமிக்கப் பெரும் தொகையைச் செலவு செய்யும் சமூக வலைதள நிறுவனங்கள் உங்களுக்கு எப்படி இலவசமாகச் செயலிகளைக் கொடுக்கின்றன? உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, சந்தை நிறுவனங்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதால் அவற்றுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. ஆம்! உங்களுக்கு ஒரு பொருள் இலவசமாகக் கிடைக்கிறது என்றால், உண்மையில் விற்பனை செய்யப்படுவது பொருள் அல்ல... நீங்கள்தான்.