நாடகத்தில் ஒளிர்ந்த பொன்னி​யின் செல்​வன்

நாடகத்தில் ஒளிர்ந்த பொன்னி​யின் செல்​வன்
Updated on
3 min read

தமிழின் புகழ்​பெற்ற நாவல் கல்கி​யின் ‘பொன்னி​யின் செல்​வன்’. ‘கல்கி’ இதழில் தொடராக வந்த இந்த நாவலை 1950இல் தொடங்கி, 1954இல் நிறைவுசெய்​தார் கல்கி. இந்த நாவல், நாடக வடிவமாகச் செய்த பயணத்தை ஆராய்​கிறது இக்கட்டுரை.

இந்த நாவலைத் திரை வடிவில் கொண்டுவர வேண்​டும் என்ற முயற்சி 1958இல் தொடங்​கியது. எம்.ஜி.ஆர். கமல் ஹாசன் ஆகியோர் இந்த முயற்​சி​யில் ஈடுபட்​டனர். ஆனால், 64 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்​தினம் இந்த நாவலை, இரண்டு பாகங்களாகத் திரைப்​படமாக உருவாக்கி வெற்றி​பெற்​றார். இந்த நாவல், 1999-2024 வரை சென்னை நாடக மேடைகளில் ‘பொன்னியின் செல்​வன்’ நாடகமாக நிகழ்த்​தப்​பட்​டுள்​ளது.

1999இல் சென்னை​யில் மேஜிக் லாண்​டர்ன் கலைக் குழு​வினர் இந்த நாவலை வெற்றிகரமாக நாடகமாக நிகழ்த்​திக் காட்டினார்கள். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5, 6, 7, 8 தேதி​களில் ‘பொன்னி​யின் செல்​வன்’ நாடகத்​தைச் சென்னை ஒய்.எம்​.சி.ஏ. திறந்​தவெளி அரங்​கில் அரங்​கேற்றினோம். அது எங்களுக்கு எளிதாக அமைந்​து​விட​வில்லை. தமிழ் நாடக உலகின் முன்னோடிகள் திரை​யுலக நண்பர்கள் பலர் எங்களுக்கு உறுதுணையாக இருந்​தார்​கள்.

இந்த நாடகத்​தின் இயக்​குநர் பிரவீன் கண்ணனூர், பிரான்​ஸைச் சேர்ந்த அரியான் முஷ்கினிடம் பயின்ற​வர். பல ஆங்கில நாடகங்​களின் தமிழ் வடிவை இயக்​கிய​வர். ஒரே அரங்​கத்​திலேயே காட்சி மாற்​றம், மேடை​யின் பயன்​பாடு, அணையாத விளக்கு, நடிகர்​களின் நடிப்பு என நாடகம் முழு​மை​யும் ஒரு புது​மையை, பிரமிப்பை உருவாக்கி இருந்​தார் இயக்​குநர் பிரவீன்.

அதே ஆண்டில் நான்கு நாட்கள் நடைபெற்ற நாடகம் அதன் பிறகு ஒரு முறைகூட மேடை ஏறவில்லை. பொருளா​தாரச் சூழல் அதற்​குக் காரணம். வேறு எந்த நாடகக் குழு​வும் இந்த நாடகத்தை அரங்​கேற்றத் துணி​ய​வில்லை. 2014இல் இந்த நாடகத்தை மீண்​டும் மேடை​யில் அரங்​கேற்ற சென்னையைச் சேர்ந்த ஒரு விளம்பர நிறு​வனம் முன்​வந்​தது.

2012இல் சென்னை மியூசிக் அகாடமி அரங்​கில் கலை நிகழ்ச்​சிகள் நடத்​திவந்த எஸ்.எஸ்​.இன்​டர்​நேஷனல் லைவ் விளம்பர நிறு​வனம், பார்​வை​யாளர்​களுக்​குப் புதிதாக ஏதாவது ஒரு படைப்​பைத் தர வேண்​டும் என்ற எண்ணத்​தில் ‘பொன்னி​யின் செல்​வனை’ நாடகமாக மேடையேற்ற விரும்​பியது. அதற்காக மேஜிக் லாண்​டர்ன் குழு​வினரை அணுகினார்​கள். புதி​ய​வர்களைச் சேர்த்​துக்​கொண்டு மேடை ஏறத் தயாரானார்கள் மேஜிக் லாண்​டர்ன் குழு​வினர்.

2014இல் ‘பொன்னி​யின் செல்​வ’னுக்கு 60ஆம் ஆண்டு. அதைக் குறிக்​கும் வகையில் ஜூலை 8-14 வரை ஒரு திரு​விழாவாக நாடகம் நிகழ்த்​தப்​பட்​டது. ஏழு நாளும் அரங்கம் நிறைந்த காட்​சிகளாக மாபெரும் வரவேற்​பைப் பெற்றது இந்த நாடகம். தொடர்ந்து 2015இல் சென்னை மியூசிக் அகாட​மி​யில் ஜூலை 3 - 12 வரை அரங்கு நிறைந்த காட்​சிகளாக இந்த நாடகத்தை இதே நிறு​வனம் நடத்​தி​யது. 2015இல் நிகழ்த்​தப்​பட்ட நாடகம் பற்றிக் குறிப்​பிடும்​போது ‘குமுதம்’ இதழில் ‘அரசு கேள்வி பதில்’ பகுதி​யில் பிளாக்​கில் டிக்​கெட் வாங்​கி​யாவது நாடகத்​தைப் பார்த்துவிட வேண்​டும் என்று எழுதி​யிருந்​தார்​கள்.

2015இல் ‘ஆடு​துறை ஸ்ரீ சங்கரநாராயண சபாவினர் நடிக்​கும், சென்னை ராஜ் விஷூவல் ஆர்ட்ஸ் தயாரிப்​பில், சென்னை ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் வழங்​கும் கல்கி​யின் ‘பொன்னி​யின் செல்​வன்’ 2015 ஏப்ரல் 10, 11, 12 நாரத கான சபாவில்’ என்று அறிவிப்பு வெளி​யானது. 2007இல் கும்​பகோணம் வாணி விலாஸ் சபாவில் நாங்கள் ‘பொன்னி​யின் செல்​வ’னை நடத்​தி​ய​போது, அதற்கு அரங்கம் அமைத்​தவர் மதுரைக் கண்ணன்.

அவர் 2014இல் சென்னை​யில் ‘பொன்னி​யின் செல்​வன்’ நடத்த வருமாறு அக்குழு​வினரை அழைக்க, 2015இல் 26 காட்​சிகளாக இந்நாடகம் சென்னை​யில் அரங்​கேறியது. நாடகத்​திற்கு வசனம், கலைச்​செல்வம் சாம்பு. நாடக இயக்​குநர் ஆடுதுறை பாஸ்​கர்.

2015இல் இந்நாடகத்தை அரங்​கேற்றிய மற்றொரு குழு டி.வி.கே.கல்ச்​சுரல் அகாடமி. டி.வி.கே.ரமேஷ் தயாரிப்​பில் மல்லிக்​ராஜ் இயக்​கத்​தில் 2015 ஜூன் 25, 26, 27 தேதி​களில் ராஜா அண்ணாமலை மன்றத்​தில் மேடையேறியது ‘பொன்னி​யின் செல்​வன்’. எஸ்.எஸ்​.இன்​டர்​நேஷனல் லைவ் தயாரிப்பே தங்கள் ‘பொன்னி​யின் செல்​வன்’ நாடகத்​துக்கான ஊக்கி என்று கூறினார் அஜய் என்டர்​டைன்ஸ் குழு​வின் நாடக இயக்​குநர் மல்லிக்​ராஜ். இவரது ‘பொன்னி​யின் செல்​வன்’ 2015 முதல் தமிழ்​நாட்​டிலும் பிற மாநிலங்​களி​லும் 265 முறைக்கு மேல் மேடையில் நிகழ்த்தப்பட்ட சாதனை புரிந்​தது. இவரது நாடகத்​திற்கு வசனம், பூவை தயா.

2017இல் ‘பொன்னி​யின் செல்​வன்’ நாடகத்​திற்​கும், தமிழ் நாடக உலகிற்​கும் பெருமை சேர்க்​கும் நிகழ்வு ஒன்று நடைபெற்​றது. சிங்​கப்​பூர்த் தமிழ் மொழி விழா​வில் ஒரு பகுதியாக ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதி​களில் எஸ்பிளனேடு அரங்​கில் ‘பொன்னி​யின் செல்​வன்’ அரங்கு நிறைந்த காட்​சிகளாக நடைபெற்​றது. ஒரு காட்​சிக்குப் பார்​வை​யாளர்கள் 3000பேர் என மூன்று காட்​சிகளில் பார்​வை​யாளர்கள் 9000பேர் நாடகத்​தைக் கண்டு களித்​தனர். எஸ்.எஸ்​.இன்​டர்​நேஷனல் லைவ், மேஜிக் லாண்​டர்ன் இணைந்து 2014 - 2017 வரை இந்நாடகத்தை 37 முறை மேடையேற்றி​யுள்​ளது.

2022, ஜூலை 24இல் ஈவென்ட்ஸ் குமார் ‘பொன்னி​யின் செல்​வன்’ நாடகத்தை அரங்​கேற்றினார். சி.வி.சந்​திரமோகன் எழுத்​தில் ‘வந்​தி​யத்​தேவனின் வீரப்​பயணம்’ என்கிற தலைப்​பில் நாடகத்தை நடித்து இயக்​கினார் குட்டி. இந்த நாடகம் ஆறு முறை மேடை ஏறியது. 2022 மே 8இல் ஸ்ரீ அன்னை கிரியேஷன்ஸ் பரத்​வாஜ் ‘பொன்னி​யின் செல்​வ’னை மேடை ஏற்றினார். ஸ்ரீ சங்கர்​லால் சுந்தர் பாய் ஷுகன் ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் நடித்​திருந்​தார்​கள். எழுதி​யவர் பேராசிரியர் ராணி மனோகரன். இது மூன்று முறை மேடையேறி உள்ளது.

இந்தாண்டு டிசம்பர் 8இல் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்​தில் நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற குழு​வினருக்காக இயக்​குநர் மல்லிக்​ராஜ் இந்த நாடகத்தை அரங்​கேற்றினார். ‘ஆடு​துறை ஸ்ரீ சங்கர நாராயண சபா 69ஆவது ஆண்டு விழாவையொட்டி 1988 ஜனவரி 7இல் ஆடுதுறை ஸ்ரீ ஆபத்​ச​காயேஸ்​வரர் கோயில் அப்பர் அரங்​கில் இரவு 10.30 மணிக்கு ‘பொன்னி​யின் செல்​வன்’ நாடகம் நடைபெற்​றது’ என்ற தகவலை, சென்னை நகர நாடக அரங்​கில் நடைபெற்ற பொன்னி​யின் செல்வன் நாடக வரலாற்றுக்கு முன் வரலாறு என அதற்கான அழைப்​பிதழ் சான்​றுடன் ஆடுதுறை பாஸ்கர் பதிவுசெய்​கிறார்.

2022இல் வெளியான ‘பொன்னி​யின் செல்​வன்’ திரைப்​படம் அதன் ஆளுமை​களின் பலத்​தில் நாடு தழுவிய வெற்றியைப் பெற்றுக் குன்​றி​லிட்ட ​விளக்காக ஒளிர்​கிறது. அதற்குப் பல ஆண்​டு​களுக்கு ​முன்​பாகவே தொடங்கிய ‘பொன்னி​யின் செல்​வன்’ நாடக வரலாறு குடத்​திலிட்ட ​விளக்​காகவே அமைந்​து​விட்​டது. அந்த ஒளியை உல​கின் பார்​வைக்​குக் ​காட்ட வேண்​டும்​ என்​பதே கட்டுரையின் நோக்கம்.

- தொடர்​புக்கு: anbesivam24@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in