

ஒளிப்படக் கலைஞர் புதுவை இளவேனில் இலக்கியவாதிகள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள் ஆகியோரை எடுத்த ஒளிப்படங்களையும் அந்தந்த ஆளுமைகளை அவர் ஒளிப்படம் எடுத்த கதையையும் அவர்களுடனான அனுபவங்களையும் பதிவுசெய்திருக்கும் நூல் இது. இதழாளர் சுதேசமித்திரன் நடத்திய ‘சாம்பல்’ சிற்றிதழிலும் கரோனா ஊரடங்குக் காலத்தில் தொடங்கி நடத்திய ‘அவநாழி’ என்னும் இணைய இதழிலும் வெளியான ஒளிப்படக் கட்டுரைத் தொகுப்புகள் இவை. எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், பெருமாள்முருகன், அழகிய பெரியவன், பாவண்ணன், இளம்பாரதி, பவா செல்லதுரை, கவிஞர்கள் கல்யாண்ஜி (எழுத்தாளர் வண்ணதாசன்), விக்ரமாதித்யன், அரசியல் தலைவர்கள் ரவிக்குமார், கனிமொழி கருணாநிதி, கர்னாடக இசைப் பாடகர்கள் டி.கே.பட்டமாள், சஞ்சய் சுப்ரமணியன், டி.எம்.கிருஷ்ணா, ஓவியர்கள் ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது என 21 ஆளுமைகள் குறித்த பதிவுகள் இந்த முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. பெரிய அட்டையில் வண்ணப் படங்கள் மட்டுமல்லாமல், கறுப்பு-வெள்ளைப் படங்களும் கண்களைக் கவர்கின்றன.
பெரும்பாலான ஒளிப்படங்கள் வழக்கத்துக்கு மாறான கோணங்களில் உறுத்தாத ஒளி அமைப்பில், ரசனையான தருணங்களைப் படம்பிடிக்கும் வகையில் அமைந்துள்ளன. நமக்குப் பரிச்சயமான, மதிப்புக்குரிய ஆளுமைகளை வெவ்வேறு பின்னணிகளில் மாறுபட்ட தோரணைகளில் ஒளிப்படங்களில் பார்ப்பது அவர்களை மேலும் மனதுக்கு நெருக்கமாக்குகிறது. சுந்தர ராமசாமி கடற்கரைக்கு முன்பு இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு நிற்கும் புகழ்பெற்ற ஒளிப்படம் இளவேனில் எடுத்ததுதான். தீவிர வாசகரும் எழுத்தாளருமான இளவேனில் எழுத்தாளர்களின் நூல்களை வாசித்த பிறகே அவர்களை ஒளிப்படம் எடுத்திருக்கிறார். அவர்களின் எழுத்துகள் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தையும் பதிவு செய்திருக்கிறார். இளவேனிலைத் தனது வாரிசுகளில் ஒருவராக அறிவித்த கி.ராவைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார்.
கனிமொழியை ஒளிப்படம் எடுத்தது, அதன் மூலம் அவரது தந்தை மு.கருணாநிதியைச் சந்தித்தது, கருணாநிதி கையில் ஒளிப்படக் கருவியை வைத்திருக்கும் ஒளிப்படத்தை எடுத்தது, இந்தச் சந்திப்பைக் கனிமொழி ஒளிப்படக் கருவியில் பதிவுசெய்தது என நூலில் ஆளுமைகளின் சுவாரசியமான பக்கங்கள் காணக் கிடைக்கின்றன. ரவிக்குமார் பற்றிய கட்டுரையிலும் வாசிப்பு, எழுத்து, களச் செயல்பாடு என அவரது பன்முக ஆளுமையின் வீச்சை உணர முடிகிறது. முறுக்கு மீசையுடன் சஞ்சய் சுப்ரமணியத்தைப் பதிவுசெய்த ஒளிப்படங்களும் அவருடனான அனுபவங்களும் நூலுக்கு அழகு கூட்டுகின்றன. ஒளிப்படம் எடுத்த ஆளுமைகளின் மேன்மையை மட்டுமே பதிவுசெய்யும் இளவேனில் தன்னைப் பற்றி எந்த இடத்திலும் தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. தனக்கு கர்னாடக இசை தெரியாது என்பதுபோல் பல இடங்களில் சுய விமர்சனமும் செய்துகொள்கிறார். தனது ஒளிப்படங்களுக்கு வந்த விமர்சனங்களையும் நேர்மையுடன் பதிவுசெய்துள்ளார். இளவேனிலின் ஒளிப்படங்களையும் எழுத்தையும் போலவே அவருடைய இந்தக் குணங்களும் படிப்பவர் மனதில் ஆழமான தாக்கம் செலுத்துகின்றன.
நிச்சலனத்தின் நிகழ்வெளி
புதுவை இளவேனில்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,
சென்னை
விலை: ரூ.600
தொடர்புக்கு: 99404 46650