கேணிக் கூட்டம் நினைவுகள்: ஞாநியின் ‘கேணி’ இடிக்கப்பட்டுவிட்டது!

கேணிக் கூட்டம் நினைவுகள்: ஞாநியின் ‘கேணி’ இடிக்கப்பட்டுவிட்டது!
Updated on
3 min read

ஞாநிக்கு 2009இல் வீடு தேடும்போது கே.கே.நகரில் என் வீட்டின் அருகே ஒரு வீடு அமைந்தது. வீடு பேசி முடித்ததும், ஞாநியும் நானும் வீட்டை மறுமுறை பார்வையிட்டோம். பெரிய மரங்கள், அதனை ஒட்டிய ஒரு சிறிய கிணறு. கிணற்றைச் சுற்றிய சிமென்ட் தளம் என அந்த வீட்டின் பின்புறம் அழகாக இருந்தது. ஞாநி சொன்னார், “பாஸ், மாசா மாசம் இங்க நாம ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தலாம். என்ன சொல்றீங்க?”. “நல்ல யோசனை ஞாநி.” உடனே அந்தக் கிணற்றடியிலேயே திட்டங்கள் தீட்டப்பட்டன.

மாதம் ஓர் எழுத்தாளர், வருபவருக்குச் சன்மானம் தர இயலாது. ஆட்டோ காசு மட்டும் கொடுக்கலாம். ஆனால், நாங்கள் கொடுத்த பயணச் செலவைப் பல விருந்தினர்கள் வேண்டாம் என்று மறுத்துக் கைகளைப் பற்றி, ‘இந்த நிகழ்ச்சி மறக்க முடியாதது’ என்று சொல்லிச் சென்றதுதான் நடந்தது. பார்வையாளர்கள் அனைவருக்கும் தேநீர், பிஸ்கட் வழங்கினோம். ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு. மாலை நாலு மணிக்கு ஆரம்பித்து ஆறு மணி வரைக்கும் கிணற்றடியில் நிகழ்ச்சி நடக்கும். ‘கேணி’ என்று பெயரிட்டோம்.

முதல் நிகழ்வுக்கு எஸ்.ராமகிருஷ்ணனை அழைக்கலாம் என்று முடிவுசெய்தோம். முதல் நிகழ்ச்சியில் அவர் பேசினார். கிணற்றடிக்கும் பெண்களுக்குமான உறவில் தொடங்கிய அருமையான பேச்சு. சுமார் முப்பது பேர் கொண்ட கூட்டம். மிகவும் நிறைவாக இருந்தது. அன்று தொடங்கியது கேணியின் பயணம். அற்புதமான நாள்கள் அவை. எப்போது இரண்டாம் ஞாயிறு வரும் என்று எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் படிப்படியாக வளர்ந்தும் மெருகேறியும் வந்தன.

ஞாநியின் அனுபவ பலம்

நான்கு மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கும் என்றாலும் சிறப்பு விருந்தினர் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவார். பார்வையாளர்களில் சிலரும் வந்திருப்பார்கள். அப்போதே வீட்டினுள் உரையாடல் ஆரம்பித்துவிடும். அதன் பின் நான்கு மணிக்குத் தொடங்கி, விருந்தினர் பேசி, கலந்துரையாடல் நிகழ்ந்து எல்லாம் முடிந்த பின் வீட்டினுள் மீண்டும் உரையாடல் தொடரும். நிகழ்ச்சியில் ஞாநி விருந்தினரை அறிமுகம்செய்து நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார். நான் நன்றி சொல்லி நிகழ்ச்சியை முடிப்பேன்.

சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடி நிகழ்ச்சியை ஞாநி அற்புதமாக நடத்திச்செல்வார். அவரது நீண்ட நாள் பத்திரிகை, சமூக அனுபவத்தின் காரணமாக எல்லா ஆளுமைகளுமே அவருக்குப் பரிச்சயமானவர்கள். எனவே, யாரிடம் எதைக் கேட்க வேண்டும், எதைப் பெற வேண்டும் என்கிற தெளிவு அவரிடம் இருந்தது. அதன் பின் பார்வையாளர்களின் உரையாடலின்போது உரையாடல் அநாவசியமாக இழுபடாமல், தடம் மாறாமல் அவர் ஒருங்கிணைப்பார்.

கேணிக்கு வருகை தந்த எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், அசோகமித்திரன், மனுஷ்யபுத்திரன், வண்ணநிலவன், வண்ணதாசன், கி.ராஜநாராயணன், ஜெயமோகன், இமையம், மாலதி மைத்ரி, பாமா, அழகிய பெரியவன், கண்மணி குணசேகரன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ஷோபா சக்தி, பெருமாள்முருகன், சாருநிவேதிதா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டது. யார் யாரை கேணிக்கு அழைக்க வேண்டும் என்பதை ஞாநியும் நானும் விவாதித்து முடிவுசெய்வோம். யாரை அழைக்க வேண்டும் என்பதைவிட, யாரை அழைத்துவிடக் கூடாது என்பதில் ஞாநி மிகவும் கறாராக இருந்தார். பல நேரம் மணிக் கணக்கில்கூட அந்த விவாதம் எங்களுக்குள் நீண்டிருக்கிறது.

கேணியின் பன்முகம்

அநேகமாக அங்கு வராத முக்கிய எழுத்தாளர்களே இல்லை எனலாம். எழுத்தாளர்கள் என்பதைக் கொஞ்சம் விஸ்தரித்து ஓவியர்கள், திரைக்கலைஞர்கள், பாடகர்கள் என்று பல ஆளுமைகளும் வந்து கலந்துகொள்ளும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தினோம். நீதிபதி சந்துரு சட்டங்கள் குறித்துப் பேசினார். தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா, தேர்தல் பற்றியும் வாக்களிப்பது பற்றியும் பேசினார். டி.எல்.சஞ்சீவிகுமார் குடிப் பழக்கத்தின் கேடுகள் குறித்து உரையாற்றினார். ஒரு காதலர் தினத்தின்போது காதல் குறித்துப் பார்வையாளர்கள் அனைவரும் பங்கேற்ற கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம்.

நா.மம்முது தமிழ் இசை, பண்கள் குறித்துப் பேசினார். டி.எம்.கிருஷ்ணா பேசியும் பாடியும் சுவாரசியப்படுத்தினார். பியானோ இசைக் கலைஞர் அனில் ஸ்ரீனிவாசன் பியானோ வாசித்தார். ஓவியர் நெடுஞ்செழியனும் இந்திரனும் கலந்துகொண்டு ஓவிய ரசனை குறித்துப் பேசினார்கள். நெடுஞ்செழியன் ஓர் ஓவியத்தை வரைந்து காட்டினார். நடிகர் சிவகுமார் தன் அனுபவங்களைப் பகிர வந்தார். எழுத்தாளர் பாமா பேச வந்தபோது, அவரது ஒரு கதையை வினோதினி சிறுநாடகமாக நிகழ்த்திக் காட்டினார். ஓவியர் மனோகர் தேவதாஸ் வந்தபோது சபை நெகிழ்ந்து பிரமித்தது. கேணியின் பார்வையாளர்களாக வந்தவர்களில் பலர், அதன் பின் படைப்பாளிகளாகப் பெயர்பெற்றனர். பல கூட்டங்களில் பல ஆளுமைகளே பார்வையாளர்களாகவும் கலந்துகொண்டனர். தொடர்ந்து வந்த பார்வையாளர்கள் பரஸ்பரம் நண்பர்கள் ஆயினர். இப்போதும் என்னிடம் கேணி பற்றிப் பேசும் மனிதர்களை அவ்வப்போது சந்திக்கிறேன்.

கேணியின் சிறப்பு அதில் இருந்த எளிமையும் பன்முகத்தன்மையும்தான். எல்லா உரையாடலுக்கும் அதில் இடமிருந்தது. அநாவசிய வம்புகள் தவிர்க்கப்பட்டன. அன்பும் மகிழ்ச்சியும் மன நிறைவும் கொண்ட நிகழ்வுகளாகக் கேணியின் கூட்டங்கள் இருந்தன. சில ஆண்டுகள் சிறப்பாக நடந்த கேணி ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. இரண்டு காரணங்கள். கிட்டத்தட்ட எல்லா ஆளுமைகளையும் அழைத்துவிட்டோம். ஒரு இடைவெளி விடலாம் என்று யோசித்தோம். இன்னொரு காரணம் ஞாநியின் உடல்நிலை. இரண்டையும் கணக்கில் கொண்டு கேணி நிறுத்தப்பட்டது. அதன் பின் ஞாநி காலமானார். கேணி வீட்டில்தான் அவர் சடலம் கிடத்தப்பட்டது. அந்த கேணி வீடு இப்போது இடிக்கப்பட்டுவிட்டது. என்னால் அந்த வீட்டைச் சுலபமாகக் கடந்துவிட முடியவில்லை.

- திரை இயக்குநர், எழுத்தாளர்
தொடர்புக்கு: bhaskarwriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in