

குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் நேரடியாகப் பால் கொள்முதல் செய்யத் தொடங்கியிருக்கிறது. ‘இதை அனுமதிப்பது ஆவினுக்குப் பாதகமாக முடியும்’ எனத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் பால் கொள்முதல், கையாளும் கட்டமைப்புகள் எனச் சட்டென ஒன்றைச் சாத்தியப் படுத்த முடிகிற அளவுக்கு, இந்தியாவின் 6 பில்லியன் டாலர் நிறுவனமாக அமுல் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
அதன் வெற்றிக் கதையை ‘மந்தன்’ (1976) என்கிற படமாக எடுத்தார் ஷியாம் பெனகல். கூட்டுறவு அமைப்பிலும் சாதிய ஒடுக்குமுறை, இடைத்தரகர்களின் சுரண்டல் ஆகியவற்றை மீறி, சமூக அடுக்கில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நிலையில் இருந்த பால் உற்பத்தியாளர்கள் தங்களின் பொருளாதார மீட்சிக்காக அணிதிரண்டனர். அதை, வெண்மைப் புரட்சியின் வழியாக அமுல் எப்படிச் சாதித்தது என்பதை, வெகுமக்கள் கொண்டாடிய ‘இணை சினிமா’வாகப் படைத்தவர் ஷியாம் பெனகல்.
பெனகலின் மூன்றாவது படமான ‘மந்தன்’, நடந்து முடிந்த கான் திரைப்பட விழாவில் (Retrospective) திரையிடப்பட்டது. 48 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இது, சுதந்திரத்துக்குப் பிறகான வைகறை இந்தியாவின் சமூகப் பண்பாட்டு, பொருளாதார நிலையைக் கண்ணாடியாகப் பிரதிபலித்த படைப்பு. அப்படத்தின் தற்காலப் பொருத்தப்பாடும் தனித்துவமான திரைமொழியும்தான் அதன் மீள் திரையிடலைக் கோருகிறது. உலக சினிமா அரங்கில் மேதைகளாகக் கொண்டாடப்பட்டு வரும் அகிரா குரோசவா, ராபர்ட் பிரஸ்ஸான், விம் வெண்டர்ஸ், உஸ்மேன் செம்பேன் ஆகிய இயக்குநர்களின் தலை சிறந்த படைப்புகளின் வரிசையில் ஷியாம் பெனகலின் ‘மந்த’னும் கானில் திரையிடப்பட்டது, அவரது படைப்பாளுமையின் தரத்தையும் தகுதியையும் எடுத்துக்காட்டுகிறது.
பெனகலின் திரைமொழி: ‘மந்தன்’ மட்டுமல்ல; பெனகல் கடந்த 5 தசாப்தங்களாக உருவாக்கிய அவருடைய பெரும்பாலான படங்கள், இந்தியச் சமூகத்தில் சாதி, மதம், பொருளாதாரம் ஆகியவற்றின் வழியாக நிலைகொண்டிருக்கும் வர்க்க ஏற்றத்தாழ்வுகள், அதன்வழி நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, அத்துமீறல்கள், பாலியல் சுரண்டல் உள்ளிட்ட அவலங்களைக் கதாபாத்திரங்கள் எப்படி எதிர்கொண்டு போராடுகின்றன என்பதை ஒரு தீவிரக் கலை வடிவமாக முன்வைத்தவை. குறிப்பாக, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய முதன்மைப் பெண் கதாபாத்திரங்கள், நவீன இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளித்தலின் தேவையை முற்றிலும் மௌனமாகப் பேசின.
அரங்கில் படப்பிடிப்பு செய்யப்படுவதிலிருந்து உதறியெழுந்து, நட்சத்திர நடிகர்களை நிராகரித்து, மக்களின் வாழ்விடங்களில் படமாக்கியதன் மூலம் இத்தாலியின் ‘நியோ - ரியலிச’த் திரைமொழி தன்னை உலகம் முழுவதும் நிலைநிறுத்திக் கொண்டது. அதேநேரம், படைப்பாளியின் கதை சொல்லும் முறைக்கேற்ப அந்தந்தப் பகுதிக்கான யதார்த்தப் பாணிக்கு அது வழி வகுத்தது. பெனகலின் ரியலிச பாணி இந்தியாவின் சமூக மனசாட்சியை அதன் பிராந்திய எல்லைகளைக் கடந்து உலுக்கக்கூடியது. எங்கெல்லாம் எளிய மக்களும் பெண்களும் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கே பெனகலின் திரைமொழி ஓர் இடையீட்டை உருவாக்கும். அதனால்தான் ‘மாற்று சினிமா’வில் இயங்க முன்வந்த அடுத்தடுத்த இரண்டு தலைமுறைகளுக்குத் தாக்கமும் ஊக்கமும் தருவதாக பெனகலின் ரியலிச பாணி விளங்குகிறது.
தரமான விதை: விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு ஏற்ப ‘அங்கூர்’ (நாற்று) என்கிற பெனகலின் முதல் படைப்பு 1974இல் வெளியாகிப் பேசுபொருளானது. அத்துடன், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற தரமான விதை. சமூகப் படிநிலையில் சாதி, வர்க்கம் ஆகியவற்றின் அழுத்தத்தால் நகரும் கிராமிய வாழ்க்கையில், மனித நடத்தையைப் பகுப்பாய்வு செய்யும் ஒரு நேர்க்கோட்டுச் சித்திரம் இது. ஹைதராபாத்துக்கு அருகிலுள்ள ஒரு செழிப்பான கிராமத்தில் நடந்த உண்மை நிகழ்விலிருந்து ‘நாற்று’க்கான திரைக்கதையை எழுதியதாகக் குறிப்பிடுகிறார் பெனகல்.
கிராம நிலக்கிழாரின் மகனாக சூர்யா, பள்ளியிறுதி வகுப்பை முடித்த பின் அவனுக்குக் குடும்பப் பங்காக வழங்கப்பட்ட நன்செய் நிலத்தைக் கவனித்துக்கொள்ளக் கிராமத்தில் வந்து தங்குகிறான். தலித் பெண்ணான லட்சுமியும் வாய்பேச முடியாத மண்பாண்டத் தொழிலாளியான அவளுடைய கணவன் கிஷ்டய்யாவும் சூர்யாவுக்குப் பணிவிடைகள் செய்யும் தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டவர்கள். அலுமினியப் பாத்திரங்களின் வருகையால் தனது தொழிலை இழந்த கிஷ்டய்யா கள்ளுக்கு அடிமையாகிறான். ஒரு குழந்தை வேண்டுமெனக் கிராம தெய்வத்திடம் பிரார்த்திக்கும் லட்சுமிக்கும் அவளால் கவரப்படும் சூர்யாவுக்கும் இடையில் உறவு முகிழ்த்து வளர்கிறது. அதன் நிச்சயமின்மை உருவாக்கும் எச்சங்கள் இருவரையும் எப்படிப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளுகின்றன என்பதை விரித்துச் சொல்கிறது ‘அங்கூர்’.
சூர்யா - லட்சுமி ஆகிய இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் நகரும் கதையின் மையச் சிக்கல், துணைக் கதாபாத்திரங்களின் வாழ்நிலை வழியாகத் தீவிரம் பெறுவதை, தனக்கேயுரிய தனித்துவ யதார்த்தப் பாணியைக் கொண்டு, முதல் படத்திலேயே அத்திரை மொழியின் முழுமையை ‘அங்கூ’ருக்குத் தந்திருக்கிறார் பெனகல். கதாபாத்திரங்கள் இந்தி மொழி பேசினாலும் கதை நிகழும் தெலங்கானா பகுதியில் எளிய மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் தக்காணி மொழியையும் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன.
நடுவில் நிற்கும் படைப்பாளி: மனித உணர்வுகள், உறவுகள், பாலினச் சமத்துவமின்மை, இருத்தலியல் போராட்டம், விளிம்புநிலை மக்கள் சாதி அடிப்படையால் எதிர்கொள்ளும் அவலங்கள் என இந்தியச் சமூகத்தில் நிலவும் எந்தப் பிரச்சினையின் அரசியலைக் கையில் எடுத்தாலும், அதைக் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் பொதிந்து வைக்கும் விதத்தில் அவர் எடுக்கும் நிலைப்பாடு சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது.
சூர்யாவுக்கு லட்சுமி உணவு சமைக்கக் கூடாது என்னும் சாதியம், அவள் சூர்யாவால் பாலியல்ரீதியாகச் சுரண்டப்படுவதைப் புறந்தள்ளுகிறது. லட்சுமி தொட்ட பொருட்கள் எதையும் சூர்யாவின் மனைவி சாரு தொட மறுக்கும் காட்சி, பெண்களின் மனதிலும் சாதி உணர்வு கெட்டித்தட்டிக் கிடப்பதைச் சொல்கிறது. இப்படத்தில் சூர்யா, லட்சுமி, ராஜம்மா ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் பாலியல் உந்துதலுக்கு அவரவரின் சொந்தக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவை, மதுப் பழக்கம், சாதி வெறி, வர்க்க நிலை, வரதட்சிணை உள்ளிட்ட சமூகச் சிக்கல்களின் வேர்களைக் கொண்டிருப்பதைத் தனது அழுத்தமான கதாபாத்திர உருவாக்கம், திரைமொழியின் வழியாகவே பெனகல் உணர்த்திச் செல்கிறார்.
ஷபானா ஆஸ்மி, நஸீருதீன் ஷா உள்படப் பல சிறந்த நடிகர்களை இணை சினிமாவின் வழியாக அறிமுகப்படுத்தி, பாலிவுட் வெகுஜன சினிமாவுக்கு வழங்கியவர் ஷியாம் பெனகல். அவரது யதார்த்தவாதக் கதைசொல்லல் அணுகுமுறையின் தொடர்ச்சியான விளைச்சலை இன்றைய பாலிவுட் ‘ஆஃப் பீட்’ படங்களின் வழி காண முடியும். இதை ‘அங்கூர்’ என்கிற முதல் நாற்றின் வழியாகவே ஷியாம் பெனகல் தொடங்கியதை நினைவுகூர வேண்டிய தருணம் இது.
‘அங்கூர்’ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்தன