ஒடிஷாவைத் தாக்கிய உள்ளூர் புயல்! | மக்களவை மகா யுத்தம்

ஒடிஷாவைத் தாக்கிய உள்ளூர் புயல்! | மக்களவை மகா யுத்தம்
Updated on
3 min read

வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் ஒடிஷாவைத் தாக்குவது புதிதல்ல. ஆனால், ஒடிஷாவில் 2024 மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக உருவாக்கிய அரசியல் புயல், கடந்த 24 வருடங்களாக அதிகாரத்தில் இருந்த பிஜு ஜனதா தளத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது. தோல்வியைச் சந்தித்திராத உறுதியான தலைவராக விளங்கியவர், அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக். அவரை, கண்டபாஞ்சி சட்டமன்றத் தொகுதியில் 16,344 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ள பாஜக வேட்பாளர் லட்சுமண் பாக், 10 வருடங்களுக்கு முன்பு வரை ஒரு கூலித் தொழிலாளி என்னும் செய்தி ஒன்றே ஒடிஷாவின் அரசியல் புயல் ஏற்படுத்தியிருக்கும் தலைகீழ் மாற்றத்தை உணர்த்தும்.

ஒடிஷாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 78 இடங்களைக் கைப்பற்றியுள்ள பாஜக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதேபோல் 21 மக்களவைத் தொகுதிகளில் 19ஐக் கொத்தாக அள்ளியிருக்கிறது. ஓர் ஆறுதலாக, பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 சட்டமன்றத் தொகுதிகளைத் தக்கவைத்திருப்பதன் மூலம், ஒடிஷா மக்களின் வாக்களிக்கும் மனோபாவத்தில் தாக்கம் செலுத்தியுள்ள பாஜக-வின் பலவித பிரச்சார பிரம்மாஸ்திரங்களை மீறி, வலுவான வாக்கு வங்கியைக் கொண்ட மாநிலக் கட்சி என்பதைக் காட்டியிருக்கிறது.

மெல்ல மெல்ல... ஒடிஷாவின் ஆட்சிமன்ற அரசியலில் 50 ஆண்டுகளுக்கு முன்பே கால் பதித்துவிட்டது பாஜக. அது பாரதிய ஜன சங்கமாக இருந்த நெருக்கடி நிலை சகாப்தத்தின்போது, ஒடிஷா சட்டமன்றத்துக்கு நான்கு உறுப்பினர்களை அனுப்பி வைத்தது. பின்னர், 1980இல் அது பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்த பின் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி போன்ற உயர்மட்டத் தலைவர்கள் ஒடிஷாவைக் குறிவைத்து, அதன் தலைநகரான புவனேஸ்வரில் 1982இல் தேசியச் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி கவனத்தை ஈர்த்தனர். அப்போதெல்லாம் நவீன் பட்நாயக்கின் தந்தையும் இந்திய அரசியலின் சாகசக்காரருமான பிஜு பட்நாயக்கின் அசைக்க முடியாத கோட்டையாக ஒடிஷா விளங்கியது.

ஆனால், நிலைமை அப்படியே இருக்கவில்லை. 1985 சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களில் போட்டியிட்டு, ஒரு இடத்தில் வென்று கணக்கைத் தொடங்கியது பாஜக. பின்னர், 1990இல் இரண்டு இடங்கள். சரியாக 10 ஆண்டுகள் கழித்து புவனேஸ்வரில் மீண்டும் தேசியச் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி, அதை 50 ஆயிரம் தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக மாற்றிக் காட்டியது பாஜக. இதன் பின்னரே, அதன் செல்வாக்கு ஒடிஷாவில் வேர்பிடிக்கத் தொடங்கியது. 1995 சட்டமன்றத் தேர்தலில் 144 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களைப் பிடித்தது. அடுத்து வந்த ஆண்டில் புவனேஸ்வர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் வென்று, உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரட்டை இலக்கங்களுக்கு உயர்த்தியதுடன், மாநிலத்தின் தலைநகரைத் தனது கோட்டை எனப் பிரகடனப்படுத்தியது.

உறவும் பிரிவும்: இப்படி மெல்ல மெல்லத் தலையெடுத்த பாஜகவால் இன்று வீழ்த்தப்பட்டிருக்கும் பிஜு ஜனதா தளம், சஞ்சீவி மலையைப் போல் பாஜகவைத் தன் தோளில் தூக்கிச் சுமந்தது வரலாறு. காங்கிரஸில் 50 ஆண்டுகள், ஜனதா தளத்தில் 15 ஆண்டுகள் என்று பயணித்த பிஜு பட்நாயக் மறைவுக்குப் பிறகு, 1997இல் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளத்தைத் தொடங்கினார். 1998 மக்களவைத் தேர்தலில் பாஜகவைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு அதற்கு 9 இடங்களை பிஜு ஜனதா தளம் கொடுத்தது. அதில் 7 இடங்களைப் பிடித்த பாஜகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தேவேந்திர பிரதான், வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்தார். அதன்பின்னர், 2009வரை நீடித்த இந்தக் கூட்டணியில் பாஜக தனது வாக்குவங்கியைக் கணிசமாக உயர்த்திக்கொண்டது. அது மட்டுமல்ல; 2002 சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்துடனான கூட்டணியில் 35 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியதுடன், நவீன் பட்நாயக்கின் அமைச்சரவையில் 9 பாஜக உறுப்பினர்கள் மாநில அமைச்சர்களாகவும் ஆனார்கள். இந்தப் புள்ளியிலிருந்துதான் இக்கூட்டணிக்கான பிணக்குகள் தொடங்கின.

இரண்டு நகர்வுகள்: சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பிஜு பட்நாயக் முன்னெடுத்த மாநில சுயாட்சிக் கொள்கை, மொழிவழி தேசியம், மதச்சார்பின்மை ஆகியவற்றையே நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமும் உறுதியாகக் கடைப்பிடித்து வந்தது. அதேநேரம், மாநில அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் நிர்வாக இயந்திரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தும் திறன் மிக்க முதல்வராக நவீன் பட்நாயக் விளங்கிவந்தார். அதற்காக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளைத் திறம்படப் பயன்படுத்திக்கொண்டார்.

நவீன் பட்நாயக்கும் பிஜு ஜனதா தளமும் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பதைக் கண்ணுற்ற பாஜக, ஒடிஷா வாக்காளர்கள் - குறிப்பாகப் பெண் வாக்காளர்களின், பூர்வகுடி மக்களின் மனதில் இடம்பிடிக்க எண்ணியது. இந்த வேளையில்தான் 2014இல் மோடி பிரதமர் ஆனார். அப்போது ஒடிஷாவை முன்வைத்து பாஜக அரசு இரண்டு முக்கிய நகர்வுகளைச் சாதித்தது. அவை, பாஜகவின் தற்போதைய வெற்றிக்குக் கணிசமான பங்கை அளித்திருக்கின்றன. அதில் முதலாவது, தேவேந்திர பிரதானின் மகனும் ஒடிஷா மாநில பாஜகவில் செல்வாக்குப் பெற்றவருமான தர்மேந்திர பிரதானை, பெட்ரோலியம்-இயற்கை எரிவாயுத் துறைக்கு கேபினட் அமைச்சராக உயர்த்தியது. ‘உஜ்வாலா மேன்’ என ஊடகங்களால் வர்ணிக்கப்படும் இவர்தான் ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் சூத்திரதாரி. இதன் மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்களுக்கு இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாக விரிவுபடுத்தினார். இத்திட்டத்தில், தனது மாநிலப் பெண்களைக் கணிசமான அளவில் பயன்பெற வைத்தார். இரண்டாவது, பழங்குடி இனத்திலிருந்து முதல் குடியரசுத் தலைவர் என்கிற பிரகடனத்துடன் ஒடிஷாவின் மகளான திரௌபதி முர்முவைக் குடியரசுத் தலைவர் ஆக்கியது பாஜக.

அடுத்தடுத்த அஸ்திரங்கள்: அரசியல் ராஜதந்திரமும் எளிய மக்களின் நலனும் கலந்திருந்த இந்த நகர்வுகள், வாக்காளர்களின் மனநிலையில் வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில்தான், ஒடிஷா தேர்தலை எதிர்கொண்டது. இந்த வேளையில் மாநிலத்தின் தேர்தல் களச்சூழல், பாஜக முன்னெடுத்துவரும் அரசியல் பாணிக்கு அவலாகச் சிக்கியது. நவீன் பட்நாயக்கின் தள்ளாத முதுமை, அவரது நிழலாக விளங்கி வந்துள்ள முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரி வி.கே.பாண்டியனுக்கு பிஜு ஜனதா தளத்தில் உருவாக்கித் தரப்பட்ட செல்வாக்கு, புரி ஜெகந்நாதர் கோயிலின் உள் பொக்கிஷ அறைச் சாவி குறித்த சர்ச்சை ஆகியவற்றைத் தனது பிரதான அஸ்திரங்களாகக் கையிலெடுத்தது பாஜக. இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே முதல் மொழிவாரி மாநிலமாக 1935இல் உருவான ஒடிஷா மக்களின் உணர்வில் மொழிவழி தேசியம் ஊறி நிலைத்திருக்கும் ஒன்று.

அப்படிப்பட்டவர்களிடையே, ஒடிஷாவின் மருமகனாகவே இருந்தாலும் அவர் ஒரு ‘வெளியாள்’ (outsider) என்று கிலி கிளப்பிய பாஜக, வாக்காளர்களிடம் அதைப் பரவலாகக் கொண்டுசேர்ப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அது நன்றாகவே கைகொடுத்தது. பாஜகவின் வெற்றி அதிகரித்தது. இவை எல்லாவற்றையும்விட, ‘தகுதியுள்ள ஒடிஷா பெண்களுக்கு சுபத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்’ என்கிற பாஜகவின் அஸ்திரமே ஒடிஷாவில் சுழன்றடித்திருக்கிறது. இந்த வெற்றி, வறுமை, வேலைவாய்ப்பின்மையின் மடியில் ஒடிஷா இன்னும் தவழ்ந்துகொண்டிருப்பதைப் புதிய ஆட்சியாளர்களுக்குச் சொல்லியிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in