

திமுக அரசு பதவியேற்றதிலிருந்து புத்தக வாசிப்பை வளர்க்கும் திட்டங்களை உற்சாகத்துடன் முன்னெடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல இலக்கியத் திருவிழாக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும் தமிழ்நாடு அரசே இதை ஏற்று நடத்துவது பாராட்டுக்குரியது. சென்னையில் மட்டும் நடைபெற்றுவந்த புத்தகக் காட்சியை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்குமாகத் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளதும் கவனம் கொள்ளத்தக்கது. புத்தகக் காட்சிகளை ஒட்டியும் இலக்கியவாதிகள், அறிஞர்கள் போன்றோரின் உரைகள் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்கிற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஓர் உரை நிகழ்ச்சியையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துவருகிறது.
வாசிப்பை வளப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானவை. பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை என ஐந்து மண்டலங்களாக இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவை அல்லாமல் இந்த ஆண்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கரிசல் இலக்கியத் திருவிழாவையும் தனியாக ஒருங்கிணைத்திருந்தது. இந்தத் திருவிழாக்களில் தமிழ்நாட்டின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். பெரும் பொருள் செலவில் ஒருங்கிணைக்கப்படும் இந்தத் திருவிழாக்கள், உண்மையில் சமூகத்தில் என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது கேள்விக்கு உரியது.
முரணான ஏற்பாடுகள்: தமிழ்நாடு அரசு நடத்தும் இந்த இலக்கியத் திருவிழாக்களுக்குப் பேச்சாளர்களைவிடப் பார்வையாளர்களை ஒருங்கிணைப்பதுதான் மிகப் பெரிய வேலை. இது ஓர் முரண்நகை. இந்தத் திருவிழாக்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும், சென்னையில் நூலக ஆணைத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கின்றனர். மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி முதல் வட்டாட்சியர்கள் உள்படப் பல அதிகாரிகள் இந்த வேலையில் கைகோக்கிறார்கள். ஆனால், நடுநிலைப் பள்ளி தொடங்கி கல்லூரி வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் கட்டாயத்தின் பேரில் நிகழ்ச்சிக்கு அழைத்துவரப்படுகிறார்கள். அதே நேரம், இந்தியாவின் மற்ற பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களோ வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள்தாம்.
மாணவர்களைக் கூட்டிவருவதில் தவறில்லை. ஆனால், எட்டாம் வகுப்பு மாணவிகள் 20 பேரைப் பார்வையாளர்களாகக் கொண்ட அமர்வில், தமிழ் நவீனக் கவிஞர் பிரமிளின் கவிதையியல் குறித்து விவாதிப்பது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? பொருநை இலக்கியத் திருவிழாவில் இந்தத் துயரம் நடந்தேறியது.
அமர்வுகள், தலைப்புகள் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால், பார்வையாளர்களோ திருவிழா நெருங்கும் நேரத்தில்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். அதனால், மாணவர்களின் நிலைக்கும் கூடுதலாக விஷயங்கள் பேசப்படும் அரங்கில், அவர்கள் வேண்டாவெறுப்பாக அமர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்களை அழைத்துவருவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். பொது வாசகர்கள் கலந்துகொள்ளும்படியான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்படுவதில்லை, நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே விளம்பரப்படுத்துவதும் இல்லை. இவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம். கலந்துகொண்ட எழுத்தாளர்கள் பலரும் தாங்கள் தயாரித்துவைத்த உரையைப் பார்வையாளர்களுக்காக மாற்றிக்கொள்ள வேண்டி வந்தது. சொல்ல வந்த கருத்து என்பதைத் தாண்டிச் சுவாரசியம் என்பதையே பலரும் குறிக்கோளாக மாற்றிக்கொண்டிருந்தார்கள்.
எதற்கு இந்த அவசரம்?: மண்டலத் திருவிழாக்களில் அந்தந்த மண்டலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அழைக்கப்படவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது. உதாரணமாக, காவிரி இலக்கியத் திருவிழாவில் அந்த மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் சல்மா அழைக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதுபோல் சென்னை இலக்கியத் திருவிழாவில் சென்னையைப் பற்றி அதிகம் எழுதிய எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கடந்த ஆண்டு அழைக்கப்படாதது சர்ச்சையானது. அதன் பிறகு அவர் அழைக்கப்பட்டார். அரசுடன் இணைந்து செயல்படும் குழு உறுப்பினர்கள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை அழைப்பதால் இந்தத் தவறுகள் நேர்வதாகவும் சொல்லப்படுகிறது.
அழைக்கப்படும் எழுத்தாளர்கள் குறித்து முறையான அறிவிப்பு செய்யப்படுவதில்லை. அந்த அமர்வை ஒருங்கிணைப்பவர்களுக்கே அந்த எழுத்தாளரைக் குறித்து தெரியாமல் இருப்பது கவலைக்கு உரியது. பொருநை இலக்கியத் திருவிழாவில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த மாதிரியான அனுபவம் ஏற்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற சென்னை இலக்கியத் திருவிழா இரவோடு இரவாகத் திட்டமிடப்பட்டு, ஓரிரு நாள் இடைவெளியில் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
விழாக் குழு கைகாட்டியவர்கள் எல்லாம் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டனர். சில எழுத்தாளர்கள் இரண்டு அமர்வுகளில் கலந்துகொண்டனர். அவசரகதியில் உரை தயாரிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. இந்த முறை சென்னை இலக்கியத் திருவிழாவில் சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சினிமா ஒரு கலைதான். ஆனால், அதற்கு இலக்கியத் திருவிழாவில் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மற்ற எழுத்தாளர்களும் சினிமா தொடர்பான தலைப்புகளை அதிகம் தேர்ந்தெடுத்திருந்ததும் கவனிக்கத்தக்கது. இவ்வளவு அவசரகதியில் இந்த விழாவை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் என்ன என்பது புரியவில்லை.
இம்மாதிரியான வாசிப்புத் திருவிழாக்கள், வெறும் அலங்கார மேற்பூச்சாக மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் சமூகத்தில் வாசிப்பை வளப்படுத்திவிட முடியாது என்பதே உண்மை. பொழுதுபோக்க ஆயிரம் வழிகள் உள்ள இந்தக் காலத்தில், இலக்கியத் திருவிழாக்களையும் அப்படியான ஒன்றாக மாற்றும் ஒரு நடவடிக்கையாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக, மக்கள் பணத்தில் நல்ல நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு நடத்த நினைக்கும் இலக்கியத் திருவிழாக்கள், அதன் பலவீனமான ஒருங்கிணைப்பால் சம்பிரதாயமான ஒரு சடங்காக இரண்டாம் ஆண்டில் மாறிப்போய்விட்டன என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
- குமரகுருபரன்
தொடர்புக்கு: kumarakurubaran1027@gmai.com