சொல்… பொருள்… தெளிவு - உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதம்

சொல்… பொருள்… தெளிவு - உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதம்
Updated on
2 min read

இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய மாநிலங்களுக்கான உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் (GER – Gross Enrollment Ratio), தொடர்ந்து ஐந்தாவது கல்வியாண்டாகத் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அகில இந்திய உயர் கல்விக் கணக்கெடுப்பில், இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது.

அரசின் இலக்கு: உலகில் வறுமையைப் போக்கவும், நிலையான,நீடித்த வளா்ச்சியை உறுதிப்படுத்தவும் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை எட்டமத்திய அரசு சமீபத்திய ஆண்டுகளாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, உயர் கல்வி நிறுவனங்களில், வருகிற 2035இல் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 50% என்ற அளவை எட்டுவதற்கான இலக்கைமத்திய அரசு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கைச் சுட்டிக்காட்டியே, “படித்தவர்கள் திறனுள்ள பணியாளர்களாக மாறும்போது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவாக முடியும்” என மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறியிருந்தார்.

உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதம்: 18 முதல் 23 வயதினரில் எத்தனை பேர் பள்ளிக் கல்வி முடித்து, உயர் கல்வி (கல்லூரி, பல்கலைக்கழகம்) சேர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து, உயர் கல்விக்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் கணக்கிடப்படுகிறது.

பெரிய மாநிலங்களில்: 2021–2022இல், பெரிய மாநிலங்களுக்கான உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில்தமிழ்நாடு 47% பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. இதில்பெண்கள் 47.3%ஐயும், ஆண்கள் 46.8%ஐயும் பெற்றுள்ளனர்.மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் பட்டியல்சாதி - பழங்குடி மாணவருக்கான உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் முறையே 39.4%, 43.9% பெற்றுதமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பெரிய மாநிலங்களில்தமிழ்நாட்டைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரப் பிரதேசம் (36.5%), கர்நாடகம் (36.2%), மகாராஷ்டிரம் (35.3%), மத்தியப் பிரதேசம் (28.9%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்தியாவில்: 2021–2022 இல் உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் இந்தியாவில் ஒட்டுமொத்த சராசரியாக 28.4%ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், இவ்விகிதம் 2020-2021இல் 27.3%ஆகவும், 2017–2018இல் 24.6%ஆகவும், 2014-2015இல் 23.7%ஆகவும் இருந்தது. இதில் உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை 2014-2015இல் 1.57 கோடியாக இருந்த நிலையில், 2021–2022இல் 2.07 கோடியாக அதிகரித்துள்ளது.

2021-2022இல், மொத்த மாணவர்களில் சுமார் 78.9% பேர்இளங்கலைப் படிப்புகளிலும், 12.1% பேர் முதுகலைப் படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர். மேலும், இளங்கலைப் பட்டப்படிப்புகளில் கலை (34.2%), அறிவியல் (14.8%), வணிகம் (13.3%), பொறியியல்-தொழில்நுட்பம் (11.8%) ஆகிய பிரிவுகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளதாக மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

யூனியன் பிரதேசங்கள் - மாநிலங்கள்: உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதத்தில், யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை 64.8 சதவீதத்துடன் சண்டிகர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரி (61.5%), டெல்லி (49%) ஆகியவை உள்ளன. மாநிலங்களை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் 43.1%, உத்தராகண்ட் 41.8%, கேரளம் 41.3%, தெலங்கானா 40% ஆகியவை அடுத்த நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளன.

பின்தங்கிய மாநிலங்கள்: அசாம், பிஹார் மாநிலங்களில் உயர் கல்வியைத் தொடரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், உயர் கல்விக்கான சேர்க்கை விகிதத்தில் இம்மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. அசாமில் உயர் கல்விக்கான சேர்க்கை விகிதம் 16.9%ஆகவும், பிஹாரில் 17.1%ஆகவும் பதிவாகியுள்ளன; ஜார்க்கண்டில் 18.6%ஆக உள்ளது.

யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவு 1.1% பெற்று மிகவும் குறைவான உயர் கல்விச் சேர்க்கை விகிதத்தைக் கொண்டுள்ளது. லட்சத்தீவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால், இந்தச் சேர்க்கை விகிதம் குறைவாக இருப்பதாக கல்வித் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொகுப்பு: இந்து குணசேகர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in