குற்றங்களை இயல்பென அங்கீகரிக்கும் இலக்கியவாதிகள்

குற்றங்களை இயல்பென அங்கீகரிக்கும் இலக்கியவாதிகள்
Updated on
3 min read

எழுத்தாளர் கோணங்கியை ஆசிரியராகக் கொண்டிருக்கும் ‘கல்குதிரை’ இரண்டு இதழ்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. மேஜிக்கல் ரியலிச எழுத்தின் அடையாளமாகக் கருதப்படும் கோணங்கிக்கு எதிராகப் பல இளைஞர்கள், கோணங்கியின் தம்பி ச.முருகபூபதியின் ‘மணல் மகுடி’ நாடகக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பாலியல் சித்ரவதைக் குற்றச்சாட்டுகளைக் கடந்த மார்ச் மாதம் முன்வைத்திருந்தார்கள். உலகெங்கும் பெண்கள் முன்னெடுத்த ‘மீடூ’ இயக்கம்போல, இந்தக் குற்றச்சாட்டுகளும் பரவலாக விவாதிக்கப்பட்டன.

அந்தப் பிரச்சினைகள் குறித்துப் பொதுவெளியிலோ, சம்பந்தப்பட்டவர்களிடமோ கோணங்கியோ முருகபூபதியோ எந்த வகையிலும் எதிர்வினை
யாற்றவில்லை. ‘இதெல்லாம் தனக்கும் ‘மணல் மகுடி’ நாடகக் குழுவுக்கும் எதிரான சதி’ என்பதுபோலப் பிரபல இணைய இதழுக்குப் பொத்தாம் பொதுவாகக் கோணங்கி நேர்காணல் அளித்திருந்ததோடு சரி. இடையில் எந்தச் சத்தமும் இல்லாமல் இருந்துவந்த நிலையில்தான், தற்போது ‘கல்குதிரை’ இதழ்கள் வெளியாகியுள்ளன. ‘கல்குதிரை’ கோணங்கி நடத்திவரும் சிற்றிதழ்.

அவருக்கு எதிராக இளைஞர்கள் குற்றச் சாட்டுகளை முன்வைத்தபோது, பொதுவாகப் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தட்டிக்கழிக்க முன்வைக்கப்படும் சலித்துப்போன வாதமான, ‘இவ்வளவு காலம் கழித்து ஏன் இதை அவர்கள் சொல்கிறார்கள்?’ என்கிற கேள்வி சிலரால் எழுப்பப்பட்டது. இலக்கியவாதிகள் இதுபோல் பிறழ்வது சகஜம், இதற்காகவெல்லாம் அவர் களைக் குற்றஞ்சாட்டக் கூடாது என்கிற தொனியில் சில ‘மேதை’ எழுத்தாளர்கள் பேசினார்கள். இதெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை; ஆண்களுக்கு இப்படி நடப்பதெல்லாம் ஒரு பிரச்சினையா என்கிற வாதங்களுடன் அந்த இளைஞர்கள் எழுப்பிய நியாயமான கேள்விகளைச் சிலர் புறந்தள்ளினார்கள். பலர் எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதிகாத்தார்கள்.

அடிப்படையின் பின்னணி: ‘கல்குதிரை’ புதிய இதழ்களின் வழியாக இந்தப் பிரச்சினை மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது. கோணங்கி நிகழ்த்திய பாலியல் சித்ரவதைகளை முன்பு அமைதிகாத்து அங்கீகரித்தவர்கள், இன்றைக்குத் தங்கள் படைப்புகளை ‘கல்குதிரை’யில் வெளியிடக் கொடுத்ததன் மூலம், தாங்கள் ஏதோ ஒருவகையில் கோணங்கியுடன்தான் நிற்கிறோம் அல்லது அவர் செய்தது தவறு அல்ல என்கிற சார்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ‘கல்குதிரை’யை விநியோகிக்கும் சில தமிழ்ப் பதிப்பாளர்கள், சிற்றிதழ் விற்பனையாளர்களும் இதில் அடக்கம்.
‘ஒரு பாலியல் குற்றவாளியின் இதழுக்குப் படைப்பை வழங்கி, அவருக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் எப்படி நிற்க முடியும், இது முரண் இல்லையா?’ என்று ‘கல்குதிரை’க்குப் பங்களித்தவர்களின் பெயர்களை வெளியிட்டு, பத்திரிகையாளர் ப்ரேமா ரேவதி சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியிருக்கிறார். கோணங்கி பிரச்சினை வேறு, கலை-இலக்கியச் செயல்பாடு-‘கல்குதிரை’ இதழுக்குப் படைப்பு கொடுப்பது வேறு என அதற்கும் பலர் சாக்குபோக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிக் கலை-இலக்கியத்தை வளர்த்து என்ன சாதிக்கப் போகிறோம்? மேம்பட்ட மனித உணர்வுகள், சமூக மேம்பாட்டை நோக்கியவைதான் கலை-இலக்கியங்கள் என்றால், இந்தக் குற்றங்களை எப்படி ஏற்க முடியும் என்கிற கேள்விகளுக்கு விடையில்லை.

சமீபத்தில் நாங்குநேரியில் பட்டியல் சாதி மாணவனை, சாதி-இந்து மாணவர்கள் மூன்று பேர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினார்கள். இவ்வளவு கொடூரக் குற்றத்தைப் புரிந்த அவர்கள், எந்தக் குற்ற உணர்வையும் அடையவில்லை. அவர்களை அப்படிச் செய்யத் தூண்டியது ‘சாதியப்
பெருமிதம்’. சட்டரீதியில் இன்னும் பெரியவர்களாகக் கருதப்படாத அந்த மாணவர்களின் செயல் குறித்து, அவர்களுடைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் எந்தக் குற்ற உணர்வையும் அடையவில்லை. மாறாகப் பட்டியல் சாதியினருக்கு எதிராகவே பேசுவது, செயல்படுவது, கூட்டம்போடுவது என்கிற மனப்போக்கையே கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ‘கல்குதிரை’ இதழில் தங்கள் படைப்பு வெளிவரச் சம்மதம் தெரிவித்திருப்பதன் மூலம், தமிழ் எழுத்தாளர்களும் மேற்கண்ட சாதி இந்து மாணவர்களின் வெட்டிப் பெருமித மனப்பான்மையையும் ‘இவங்க நம்ம ஆளுக’ என்கிற கண்மூடித்தனமான அபிமானத்தையுமே பிரதிபலிக்கிறார்கள். இதே எழுத்தாளர்களில் பலரும் நீதி, நியாயம், நேர்மை, அறம் பற்றியெல்லாம் பொதுச் சமூகத்துக்கு அடிக்கடி வகுப்பெடுத்திருக்கிறார்கள். ‘கலை, இலக்கியத்தை மதிக்கத் தெரியாத மதிகெட்ட தமிழ்ச் சமூகமே’ என்று மக்களைத் தூற்றியிருக்கிறார்கள்.

நமக்கும் பங்கிருக்கிறது! ஒருவேளை ‘கல்குதிரை’ யில் வெளியாகியுள்ள தங்கள் படைப்புகள் முன்பே கொடுத்தவை, அந்த இதழில் தற்போது படைப்புகள் வெளியாவதில் தங்களுக்குச் சம்மதம் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் இப்போதாவது எதிர்ப்பைப் பதிவு
செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி யாரும் செய்யவில்லை.

கோணங்கி பிரச்சினையின் பின்னணியில், ‘மீடூ பிரச்சினையில் ஆயுள் தண்டனை பெற்ற அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டின், தன் தவறை ஒப்புக்கொண்டார். தான் பாலியல் வல்லுறவு செய்த சிறுமியிடம் (திரைப்பட இயக்குநர்) ரோமன் போலான்ஸ்கி மன்னிப்புக் கோரினார்; நான்கு மாதச் சிறைத் தண்டனையும் பெற்றார்’ என்று எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நம் சமூகத்திலோ அதைச் சாதாரணமாகக் கருதும், நியாயப்படுத்தும் தன்மையையே பார்க்க முடிகிறது.

உலகில் மனிதர்கள் சறுக்குவதும், தடுமாறு வதும் புதிதல்ல. ஆனால், அதிலிருந்து நகர்ந்து தாங்கள் செய்த தவறைக் குறைந்தபட்சமாக ஒப்புக்கொள்ள வேண்டும். முந்தைய நிலையிலிருந்து மாற வேண்டும். இனிமேல் அது போன்ற குற்றங்களைச் செய்யாமல் இருப்பதற்கும், வேறொருவர் செய்யாமல் இருப்பதற்கும் இதுவே அடிப்படை. அதற்குச் சமூகமும் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்களும்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மாறாக, செய்த குற்றங்களைச் சாதாரணமாகக் கடந்துபோவதால் இதுபோன்ற குற்றங்கள் தொடரவும், எதிர்காலத்தில் நிகழவும் நாமே வழியமைத்துக்கொடுக்கிறோம். குற்றம் புரிந்தவர் மட்டுமில்லாமல், அதை எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டு நகர்பவர்களும் குற்றத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பங்கை வகிக்கிறோம். இப்படிச் செய்வது அந்தக் குற்றங்களையும் அது சார்ந்து சமூகத்தில் ஒட்டியிருக்கும் அழுக்கையும் களைய முயலாமல், அது காலம்காலமாகத் தொடர்வதற்கே வழிவகுக்கும். 

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in