

பவா செல்லதுரை, எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். தீவிர இலக்கியக் கதைகள் பலவற்றைத் தன் தனித்த குரல்வழிப் பெரும் வாசகப் பரப்புக்கு எடுத்துச் சென்ற கதைசொல்லி. இவரது கதைசொல்லும் காணொளிகள் யூடியூபில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. அவர் எழுதிய ‘நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை’ என்கிற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
உத்வேகத்துடன் தமிழ் இலக்கியத்தில் இயங்கியவர் நீங்கள்...
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், கோணங்கி, போப்பு, ஷாஜகான், நான் என எங்கள் ஏழு பேருடைய தமிழ்ச் சிறுகதைகளுடன் அவற்றுக்கு நிகரான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளுடன் ‘ஸ்பானிய சிறகுகளும் வீரவாளும்’ தொகுப்பு தமிழ் இலக்கியத்தின் முகத்தையே மாற்றியது. அன்றைக்கு இலக்கியத்தில் இதைப் பற்றிப் பேசாதவர்கள் கிடையாது. இதில் ஜெயமோகனும் ராமகிருஷ்ணனும் தீவிரமாக எழுதிவருகிறார்கள். நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் 30 ஆண்டுகள் செயல்பட்டேன். எழுதவும் வாசிக்கவும் முடியாத அளவுக்குப் பணிகள் செய்தேன். பிறகு, இது ஒரு களப்பணியாளன் செய்ய வேண்டியது; படைப்பாளி அல்ல என அதிலிருந்து வெளியே வந்தேன். தமுஎசகவுடன் முரண்பாடு எதுவும் கிடையாது.
கதை சொல்லும் இந்தக் கலையை முதலில் எப்போது தொடங்கினீர்கள்?
வாசித்த ஒரு கதையைப் பலரிடம் சொல்ல வேண்டும் என நினைப்பவன் நான். நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், “நீ இந்தப் பேச்சில் 12 கதைகளைச் சொல்லியிருக்கிறாய்” என்றார். திருவண்ணாமலையில் அவர் நடத்திவந்த பல்சமய மையத்தில் வெள்ளிக்கிழமை சாயங்காலம் கதைசொல்லும் நிகழ்ச்சி நடத்தலாம் என்ற யோசனையையும் அவர்தான் முன்வைத்தார். ஒரு படைப்பாளியாக இந்தப் புதிய முயற்சியில் எனக்கு விருப்பம் இருந்தது.
இதன் நோக்கம் என்ன?
ஷோபா சக்தியின் கதையிலிருந்து தொடங்கினேன். கதை சொல்லத் தேர்ந்தெடுக்கும் எழுத்தாளர்களின் மூன்று கதைகளைச் சொல்வது, அவர்களது புத்தகங்களை அந்த வளாகத்தில் வாசகர்களுக்காகக் காட்சிப்படுத்துவது இதெல்லாம் திட்டம். நாங்கள் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியை நடத்துவோம். வாசகர்கள் சனி, ஞாயிறுகளில் எழுத்தாளர்களின் கதைகளை வாசிக்க வேண்டும் என்பது எங்கள் கனவு. கதைசொல்லல் வாசிப்பை மட்டுப்படுத்தக் கூடாது என நினைத்தேன். தொடக்கத்தில் நிகழ்வுக்கு 60 பேர் வந்தார்கள். போகப்போக 500 பேர் வரத் தொடங்கினர்.
‘பெருங்கதையாட’லை எப்போது தொடங்கினீர்கள்?
சிறுகதைகளைச் சொல்லும் ‘கதை கேட்க வாங்க’ நிகழ்ச்சி செய்துவந்தபோது, அந்த வடிவம் நீர்த்துப் போய்விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. அதனால், அதிலிருந்து விலகி ஒரு நாவலை எடுத்துக் கதையாகச் சொல்லலாம் என நினைத்தேன்; அதுதான் ‘பெருங்கதையாடல்’. எங்கள் வீட்டுப் பத்தாயத்தில், மாமர நிழலில் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலைச் சொன்னேன். நாஞ்சில் நாடன் அதைத் தொடங்கிவைத்தார். பிறகு, திருவண்ணாமலைக்கு வெளியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி திறந்தவெளி அரங்கில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இடக்கை’ நாவலைச் சொன்னேன். என் கட்டுரைத் தொகுப்புகளில் குறிப்பிட்ட மனிதர்கள் பற்றியும் சொல்லியுள்ளேன்.
உங்கள் சிறுகதைகளில் வட தமிழகத்துக்கே உரித்தான நிகழ்த்துக் கலைகள் மீதான ஈர்ப்பு வெளிப்படுவது உண்டு. கதைசொல்லலுக்கு இது ஆதாரமா?
நிச்சயமாக இருக்கலாம். நம்முடைய ஆதி மரபே கதை கேட்கும் மரபுதான். பிறகுதான் நமக்கு எழுத்துகள் வருகின்றன. ஆதியில் தன் அனுபவங்களைச் சைகையால், பிறகு சொற்களால் இன்னொருவருக்குக் கடத்தினார்கள். கதை வாசித்தல் மட்டும் போதும் எனச் சிலர் நினைக்கிறோம். ஆனால், கதை சொல்லல் இரண்டாம்பட்சமானது கிடையாது.
கதையைச் சொல்லும்போது அது முழுக்க உங்கள் பார்வையில்தான் இருக்கும். அதனால் கதையின் பன்முகத்தன்மை பாதிக்கப்படும் சாத்தியம் உண்டா?
குறைவான சாத்தியம்கூட இல்லை. நான் சொல்லும் கதையைக் கேட்கும் ஒரு சாதாரண வாசகர், கேட்பதற்கு முன்னும் கேட்டதற்குப் பின்னும் அந்தக் கதையை வாசிக்கப் போவதில்லை என வைத்துக்கொள்ளுங்கள். நான் கதை சொல்வது நன்மையா, இல்லையா? இன்னொரு விஷயம், எழுதுவதுதான் உயர்வான விஷயம் என எழுத்தாளர்கள் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், கதைசொல்வதும், எழுதுவதற்கான படைப்பு அவஸ்தையையும் உள்ளடக்கியதுதான். சில இடங்களில் எழுத்தாளரைத் தாண்டியும் போக முடியும்.
கோயம்புத்தூரில் ஜெயகாந்தனின் ‘பாரீசுக்குப் போ’ நாவலைச் சொன்னேன். அந்த நாவலில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இருப்பார்கள். ஆனால், அந்த நாவலில் வேலைக்காரரான முனுசாமியை மையப்படுத்திக்கொண்டே இருப்பேன். இந்த என் பார்வை வேறு ஒருவருக்கு அகப்படாமலேயே போய்விடலாம்.
உங்கள் கதைசொல்லல், என் கதையை வெளிப்படுத்தவில்லை என எழுத்தாளர்கள் யாராவது விமர்சித்திருக்கிறார்களா?
அப்படிச் சொன்ன ஒரே எழுத்தாளர் திலீப் குமார். அவருடைய ‘கானல்’ என்கிற கதையைச் சொன்னேன். அதைத் தவறாகக் ‘கானல்நீர்’ எனச் சொல்லிவிட்டேன். பிறகு வேறொரு நிகழ்ச்சியில் சந்திக்கும்போது “நீங்கள் என் கதையின் தலைப்பைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்” என்றார். மேலும், தன் கதைகளைச் சொல்வதில் உடன்பாடில்லை என்றார். உடனடியாக அவர் கதைகளை என் யூடியூப் பதிவிலிருந்து நீக்கிவிட்டேன். பதிலாக அவர் கதைகளை வாசித்துப் பதிவேற்றினேன். அது அவருக்குப் பிடித்திருந்தது.
கதைசொல்வதில் என்ன மாதிரியான இலக்கணத்தைப் பின்பற்றுகிறீர்கள்?
கதைகளின் ஆன்மாவைத்தான் பிடிக்க விரும்புகிறேன். ஜெயகாந்தனின் ஒரு கதையில் அந்தப் பெண், மாங்காய் கடித்தாள் என்று சொல்லிவிட்டேன். ஆனால், புத்தகத்தில் புளியங்காய் என இருப்பதாக ஒரு வாசகர் சொன்னார். ரெண்டுமே புளிதானே?
எழுத்தாளராக உங்கள் கனவு?
திருவண்ணாமலையில் கிட்டத்தட்ட எழுநூறு வெளிநாட்டினர் வாழ்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை, திருவண்ணாமலைக்காரர்களின் வாழ்க்கையிலிருந்து விலகியே இருக்கும். இவர்களைப் பற்றி என் கதைகளில், கட்டுரைகளில் பதிவுசெய்திருக்கிறேன். நாவல் என்கிற பரப்பில் இதையெல்லாம் இப்போது பதிவுசெய்துவருகிறேன். திருவண்ணாமலை பின்னணியில் தமிழில் இல்லாத வகையில் புதுமையாக இந்த நாவல் இருக்கும்.