

திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான க.அன்பழகன், மே தின விழாக்களில் கலந்துகொண்டு ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. ஒரு மணி நேர உரையை எழுத்து வடிவில் அப்படியே கட்டுரையாகவும் வாசிக்கலாம் என்ற வால்டேர் பாணி சொற்பொழிவுகள் இவை. தமிழ்நாட்டில் மே தினக் கொண்டாட்டத்தை முன்னெடுத்தது சுயமரியாதை இயக்கமே என்ற பெருமிதத்துடன், உலகளவில் உழைப்பாளர்கள் எதிர்கொண்ட சுரண்டலையும் அனுபவித்த துயரங்களையும் அதிலிருந்து மீள மேற்கொண்ட போராட்டங்களையும் இவ்வுரைகள் நினைவூட்டுகின்றன. இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தைக் கொண்டாடித் தொழிற்சங்கத்தை வளர்த்தெடுத்த சிங்காரவேலரையும் திரு.வி.க.வையும் விதந்துரைக்கும் இந்த உரைகள், பிரிட்டிஷ் ஆட்சியில் தொழிற்சங்க நடவடிக்கைக்காக திரு.வி.க. நாடு கடத்தப்படவிருந்த நிலையில், அவருக்கு ஆதரவாக அன்றைய நீதிக்கட்சி அமைச்சரவை செயல்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றன. சுயமரியாதை இயக்கம் தொழிலாளர் உரிமை இயக்கமாகவும் விளங்கியதை மாநாட்டுத் தீர்மானங்களை உதாரணமாக்கி விவரிக்கின்றன.
மரபார்ந்த தொழிற்சங்கவாதிகளைப் போல கூலி, விலை, லாபம், உபரி மதிப்பு என்று கோட்பாடுகளைச் சொல்லி கேட்போரிடம் மிரட்சியை ஏற்படுத்தாமல் அடிமைகளாக, பண்ணையடிமைகளாக, ஆலைத் தொழிலாளிகளாகக் காலம்தோறும் உழைப்பாளர்கள் அனுபவித்துவந்த கொடுமைகளையும் அதற்குக் காரணமான முடியாட்சி முறையை, நிலப்பிரபுத்துவத்தை, முதலாளித்துவத்தை எதிர்த்து நடந்த மக்கள் புரட்சிகளையும் உணர்ச்சிகரமான மொழிநடையில் விவரித்திருக்கிறார் க.அன்பழகன். உரிமைப் போராட்டங்கள் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக மட்டுமல்ல, மதவாதிகளின் ஆதிக்கத்துக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும்தான் நடைபெற்றுவந்திருக்கின்றன என்பதற்கு அவர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
சோவியத் ஒன்றியத்தில் சிந்தனைச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தொழிலாளர் உரிமை ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அது தேவையானதே என்பதும் அன்பழகனின் பார்வையாக இருந்திருக்கிறது. கார்ல் மார்க்ஸை, ஏங்கெல்ஸை, லெனினை, பொதுவுடைமை அறிக்கையை, ‘மூலதனம்’ பெருநூலை, ரஷ்யப் புரட்சியை, அதற்கு முன்பே எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கைக்காக சிகாகோ நகரில் நடந்த தொழிலாளர்களின் போராட்டத்தை, அப்போது நிகழ்ந்த உயிர்த் தியாகங்களைக் கருத்துச் செறிவோடு, அதே நேரத்தில் மிகவும் எளிதான முறையில் இந்த உரைகள் அறிமுகப்படுத்துகின்றன. தனித்தமிழ்வாதியான அன்பழகன், ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற முழக்கத்தையும்கூட ‘உரிமைவாழ்வு, ஒப்புநிலை, உடன்பிறப்பு உணர்வு’ என்றே தம் உரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். தொழிலாளர் துயருறும் நிலை குறித்து வள்ளுவர், பாரதி ஆகிய தமிழ்க் கவிகளும் ஷெல்லி, இக்பால், காண்டேகர் என்று பிற மொழிப் படைப்பாளிகளும் எழுதிய வரிகள் இந்த உரைகளில் விரிவாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் புரட்சிக் குரலாக முழங்கிய பாரதிதாசனைப் பற்றி தனி அத்தியாயமே இடம்பெற்றுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன் இருவரது படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. என்றாலும், இருவரது நூல்களும் பெருமளவுக்கு மறுபதிப்பு காணவில்லை. இருவருக்குமே இன்னும் நூல்வடிவம் பெறாத கட்டுரைகளும் உரைகளும் நூற்றுக்கணக்கில் உண்டு. நவீன இலக்கிய நூல்களை வெளியிட்டுவரும் தேநீர் பதிப்பகம், 1985-ல் வெளிவந்த க.அன்பழகனின் நூலை மே தினத்தையொட்டி வெளியிட்டிருப்பதன் மூலமாக அந்த மறுபதிப்பு இயக்கத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது.
மே நாள் முழக்கம்
க.அன்பழகன்
தேநீர் பதிப்பகம், ஜோலார்பேட்டை-635851
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9080909600