

இந்திய வரலாற்றில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், தேசத்தின் உயர்நிலை இலக்குகளுக்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்த மகத்தான மனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். அந்த மாபெரும் ஆளுமையின் நிழலாக, இருபதாண்டுகளுக்கும் மேலாக (1993 - 2015) அவரோடு கூடவே பயணித்தவர் அவருடைய தனிச்செயலாளர் ஆர்.கே. பிரசாத்.
கலாமுடன் தான் பணியாற்றிய காலத்தின் நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்து, ‘அப்துல் கலாம் – சொல்லப் படாத கதைகள்’ என்ற நூலாக வடித்திருக்கிறார் பிரசாத். கலாம் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரு வாரத்துக்குப் பின், அவர் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் பற்றிய திட்டமிடல்கள் தொடங்கின. பிரதமர் எந்த நேரத்திலும் வரக்கூடும்; அயல்நாட்டு விருந்தினர்கள் வரத் தொடங்கியிருந்தனர்.
பல்வேறு மாநிலங்களுக்கு அவர் போவதற்கான திட்டமிடல்களும் தொடங்கின. அவர் தான் போகப்போகிற முதல் பயணத் திட்டத்துக்கான ஊர்களின் பெயர்களை அறிவித்தார். அவை, கோத்ரா மற்றும் அஹமதாபாத்.
2002ஆம் ஆண்டுக் கலவரங்களில் இருந்து அவை இன்னமும் முற்றிலுமாக வெளியே வந்திருக்கவில்லை. “அரசாங்கம் அதை அனுமதிக்காது!” என்று அவருடைய பணியாளர்களுள் பலரும் கலாமிடம் எச்சரிக்கை செய்தனர்.
“நத்திங் டூயிங்! நான் அந்த இடத்துக்குப் போயே தீருவேன்! பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பேன்!” என்று கலாம் சொன்னார். அதிகாரத்துவ மட்டங்களில் குழப்பமும், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தன.