

சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திராவிட பண்பாட்டின் வளர்ச்சி குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும், அனைத்து கருத்துகளையும் மாற்றங்களையும் களஞ்சியமாகத் தொகுத்து ஆவணப்படுத்துவதே திராவிடக் களஞ்சியம் திட்டத்தின் நோக்கமாகும்.
திராவிட இயக்கத்தின் கருத்தியல்கள், படைப்பு வளம் குறித்த ஆய்வுகளில் வல்லமை பெற்ற வல்லுநர்கள் குழுவைக் கொண்டு இந்த பணி 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த வகையில், 13 திரட்டுகளாக வெளியிடத் திட்டமிட்டுள்ள இப்பணியில் முதற்கட்டமாக, க.திருநாவுக்கரசுவின் ‘நீதிக்கட்சி வரலாறு’, பதிப்பாசிரியர்கள் - புனிதப் பாண்டியனின் ‘தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு’, வீ.எம்.எஸ். சுபகுணராஜனின் ‘அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு’, முனைவர் எஸ்.ஆனந்தியின் ‘திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள் தொகுப்பு’, சுப.வீரபாண்டியனின் ‘திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும்’, ந.இளங்கோவின் ‘திராவிட இயக்க சிறுகதைகள்’, ஹாஜாகனியின் ‘திராவிட இயக்க கவிதைகள்’ ஆகிய
7 தொகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநர் மா. ஆர்த்தி, திராவிடக் களஞ்சியத்தின் பொது பதிப்பாசிரியர் மூ.அப்பணசாமி ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.