

சுந்தரேசபுரி, மீனாட்சி நகரம், திருஆலவாய் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் மதுரை மாநகர் 1,800க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
வண்ணமயமான கோபுரங்கள், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களைக் கொண்ட மண்டபம், பக்தர்கள் புனித நீராடும் பொற்றாமரைக் குளம் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயிலில் செப்.17ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ‘தி இந்து’ (The Hindu) குழுமம், இக்கோயிலின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில், ‘The Goddess’s Realm: The Madurai Meenakshi-Sundareswarar Temple’ என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளது.
‘மேட் ஆர்ட் பேப்பர்’ (matt art paper) தாளில் நேர்த்தியாக அச்சிடப்பட்ட 252 பக்கங்களைக் கொண்ட இந்நூல், 300க்கும் மேற்பட்ட கண்கவர் புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளது. கோயில் வளாகத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை, நேர்த்தியான மண்டபங்களின் வரிசை, பல்வேறு திருவிழாக்கள், இக்கோயிலுடன் தொடர்புடைய முனிவர்கள், பாண்டியர், சோழர், விஜயநகர, நாயக்க மன்னர்கள் உள்ளிட்ட பல ஆட்சியாளர்கள் இக்கோயிலைப் புகழ்பெற்ற அமைப்பாக மாற்ற ஆற்றிய பங்களிப்புகள் எனப் பலதரப்பட்ட தகவல்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.