உலர்ந்த தமிழன்! - மகாகவி பாரதியார் பிறந்த தின சிறப்பு பகிர்வு
பாரதி புதுவையில் வசித்தபோது பெருமழையும், சூறைக்காற்றும் புதுவையை புரட்டிப் போட்டன. ஈசுவரன் தர்மராஜா கோயில் தெருவில், தான் குடியிருந்த வீட்டைவிட்டு எதிர்ச்சாரியில் இருந்த வீட்டுக்கு பாரதி குடிபெயர்ந்த அன்று இரவு அடித்த மழையும், புயல் காற்றும் வீடுகளை கிடுகிடுக்க வைத்தது. முன்பு குடியிருந்த வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
இதைக் கண்ட செல்லம்மா தம்மை எழுப்புவது போல பாடல் இயற்றினார் பாரதி. எல்லோருக்கும் தெரிந்த பாட்டுத்தான் ஆனால், எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. இந்தப் பாடலில் மட்டும் இதை இயற்றிய நாள், தேதியைக் குறித்து வைத்திருக்கிறார் பாரதி.
புயல் காற்று… (நள வருஷம் கார்த்திகை மாதம் 8-ம் தேதி (16.11.1916) புதன்கிழமை இரவு)
மனைவி: காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே. தூற்றல் கதவு சாளரமெல்லாம் தொளைத்தடிக்குது பள்ளியிலே.
கணவன்: வானம் சிவந்தது வையம் நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே. தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு தேவி அருள் செய்ய வேண்டுகிறோம்.
மனைவி: நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரமிருந்தால் என் படுவோம்? காற்றென வந்தது கூற்றமிங்கே நம்மை காத்தது தெய்வ வலிமையன்றோ?
பாரதி மழை கண்டு அஞ்சவில்லை. அவன் வாயிலிருந்து வசனகவிதை பெருக்கெடுக்கிறது. “மழை இனிது. இடி இனிது. மின்னல் இனிது...” மழையை தரிசிக்க வாசல் திண்ணைக்கு வந்து விடுகிறான் “இது மழை அல்ல; ஊழிக்காற்று!” என்று மழையோடு ஆவேசம் கொண்டு பாரதி பாடல் புனைகிறான்.
“திக்குகள் எட்டும் சிதறி – தக்கத் தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து - வெள்ளம் பாயுது பாயுது பாயுது தாம்
தரிகிட தத்தத் ததிங்கிட தித்தோம் -அண்டம் சாயுது சாயுது சாயுது! வெட்டி யடிக்குது மின்னல் – கடல் வீரத்திரை கொண்டு விண்ணை இடிக்குது! கொட்டி இடிக்குது மேகம் - கூ கூவென்று விண்ணைக்குடையுது காற்று சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று தாளம்கொட்டி கனைக்குது வானம்! கண்டோம் கண்டோம் கண்டோம் - இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!”
காற்றோடு பேசுதல்: இயற்கையை, அதன் சீற்றத்தை, அதன் அழகைப் பாடுவதோடு நின்று விடாமல் இயற்கையோடு பேசவும் செய்கிறான் பாரதி. இந்த முறை அவன் வாக்கிலே ஆவேசமில்லை, ஆத்திரமில்லை. ஆத்ம நண்பனோடு பேசுவதுபோல இருக்கிறது.
“காற்றே வா மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே. காகிதங்களை எல்லாம் எடுத்து விசிறி எறியாதே. அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளி விடாதே. பார்த்தாயா? இதோ தள்ளிவிட்டாய். புஸ்தகத்தின் ஏடுகளை கிழித்து விட்டாய். மறுபடியும் மழையைக் கொண்டு வந்து சேர்த்தாய்!”
மழையால் புதுவையில் ஏற்பட்ட சேதாரங்களைப் புதுச்சேரியில் புயற் காற்று என்ற பெயரில் சுதேசமித்திரன் இதழுக்கு எழுதிய கட்டுரையில் பதிவு செய்கிறார்.
“இடைவிடாத மழை. இடைவிடாத காற்று. இரவு 11 மணிக்கு மேல் பெரிதாக வளர்ந்து விட்டது ஊழிக்காற்று. வீடுகள் இடிந்து விழுகின்றன. மரங்கள் சாய்கின்றன. சத்தம் பொறுக்க முடியவில்லை. ஊழிக்காற்று மருத்துகளின் களியாட்டம். பேரச்சம்.
கார்த்திகை மாதம் 9-ம் தேதி நல்ல பொழுது விடிந்தது. ஓடுகளும், கூரைகளும், மாடங்களும் சேதப்படாத வீடு ஒன்றைக்கூட நான் பார்க்கவில்லை. ஈசுவரன் கோவிலின் சிகரம் விழுந்துவிட்டது. பல இடங்களில் காக்கைகள் விழுந்து செத்து கிடக்கின்றன...” இப்படிச் செல்கிறது கட்டுரை.
உலர்ந்த தமிழன்: மழை பெய்து ஊரெல்லாம் வெள்ளக் காடான போதும் பாரதியிடம் ஒரு அவல நகைச்சுவை பொங்குகிறது. “மழை பெய்கிறது, ஊர்முழுவதும் ஈரமாகிவிட்டது, தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள், ஈரத்திலே உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலே நடக்கிறார்கள், ஈரத்திலே படுக்கிறார்கள், ஈரத்திலே சமையல். ஈரத்திலே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்கு கூட அகப்பட மாட்டான்!”
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
