

பிரான்சின் புகழ்பெற்ற ‘பிரி எமில் கிமே’ (Prix Emile Guimet) ஆசிய இலக்கிய விருது, எழுத்தாளர் ஷோபாசக்தியின் ‘ஸலாம் அலைக்’ (Salamalecs) நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 3 அன்று பாரிஸில் அறிவிக்கப்பட்ட இவ்விருது மூலம், உலக அரங்கில் தமிழ் இலக்கியத்துக்கு புதிய மகுடம் ஒன்று சூட்டப்பட்டிருக்கிறது. பாரிஸிலுள்ள ‘கிமே தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம்’ (Musee Guimet) 1879இல் நிறுவப்பட்டது.
ஆசியாவின் பழமையின் உன்னதத்தைப் பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அரிய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், ஆசியாவின் சமகாலச் சிந்தனைகளை ஐரோப்பாவுக்குப் பரப்பும் கலாச்சார மையமாகவும் திகழ்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, ஆசிய மொழிகளிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கப்படும் சிறந்த இலக்கியப் படைப்பு
களைக் கவுரவிக்க 2017 முதல் இவ்விருதை இந்த அருங்காட்சியகம் வழங்கி வருகிறது. 2026ஆம் ஆண்டுக்கான நாவல் பிரிவின் இறுதிப் பட்டியலில் தென் கொரியா, ஜப்பான், இலங்கை மற்றும் சீனாவிலிருந்து (இரண்டு நூல்கள்) என ஐந்து காத்திரமான படைப்புகள் போட்டியிட்டன.
உலக அளவில் பெரும் ஆதிக்கம் கொண்ட பிற ஆசிய மொழிகளின் முதன்மைப் படைப்புகளைப் பின்னுக்குத் தள்ளி, தமிழில் எழுதப்பட்ட ‘ஸலாம் அலைக்’ இந்த உயரிய விருதைத் தட்டிச் சென்றுள்ளது.
சென்னையில் உள்ள ‘கருப்புப்பிரதிகள்’ பதிப்பகத்தால் 2022இல் தமிழில் வெளியிடப்பட்ட இந்நாவலை, 2025இல் பிரான்சின் புகழ்பெற்ற ‘சுல்மா’ பதிப்பகம் பிரெஞ்சில் வெளியிட்டது. இதனை லெட்டீசியா இபானஸ் மிக நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார்.