

இன்றைய இளைஞர்களின் சவால்களை கொங்கு வட்டாரக் கதைகளில் வா.மு.கோமு தொடர்ந்து முன்வைத்து வருகிறார். ஆபாசம் தூக்கல் என்ற குற்றச்சாட்டு அவர் கதைகளின்மீது தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது.
அவரது கதைகளின் எல்லைகள் பரந்து விரிவதைக் காண்கையில் உடலும் உடலுக்கான தேவையும், உடலின் விகசிப்புகளுமான மக்களின் கதையாடல்களிலிருந்தே அவர் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. அவரது கதைகள், ஆபாசங்கள் என்ற குறுகிய குற்றச்சாட்டுக்களைத் தாண்டி ஆசாபாசங்களை நோக்கிச் செல்வதையே அதிகம் காணமுடிகிறது. அவ்வகையில் முற்றிலும் மாறுபட்ட கதையாடலாக ‘சானடோரியம்’ நாவல் அமைந்துள்ளது.
காசநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பழனிவேலு அங்கேயே தங்கிபத்து நாள் சிகிச்சை பெறுகிறான். அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் திருப்பூர், ஈரோடு, பெருந்துறை பகுதிவாழ் மக்கள். விவசாயத்திலிருந்து நகர்ந்து பருத்தி ஆடை உற்பத்தி, விசைத்தறிப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவர்கள்.