

நினைவுகள் என்பவை வெறும் கடந்த காலத்தின் எச்சங்கள் அல்ல; அவை நிகழ்காலத்துக்குச் சுவை சேர்க்கும் உப்பு. கடந்த காலத்தை அசைபோடாத மனிதர் யாருமில்லை.
ஆனால், அந்த நினைவுகளை மொழியில் வடித்து, காலத்தின் சாட்சியங்களாக மாற்றுபவர்கள் ஒரு சிலரே. கலாப்ரியா அந்த அரிய பரம்பரையைச் சேர்ந்தவர்.
எப்போதோ நடந்த ஒரு சிறு நிகழ்வை, ஒரு வாசனையை, ஒரு குரலை, ஒரு பார்வையை மனதின் மூலையிலிருந்து தோண்டியெடுத்து, அதைச் சுற்றித் தகவல்களையும் சித்திரங்களையும் பின்னி, வாசகரின் முன் உயிர்ப்பித்து வைக்கும் அவரது எழுத்து பிரமிப்பூட்டுகிறது!
நடுக்கடலில் வழிதவறிய கப்பலில் குடிநீர் தீர்ந்துவிடுகிறது.
சுற்றிலும் நீர். ஆனால், ஒரு துளியும் பருக முடியாது. உயிர் ஊசலாடும் தருணத்தில் இன்னொரு கப்பல் கடந்து செல்கிறது. குடிநீர் கேட்கிறார்கள். அந்தக் கப்பலில் உள்ளவர்கள் சிரித்தபடி சொல்கிறார்கள்... ‘வாளியால் கடல்நீரையே அள்ளிக் குடியுங்கள்.
இது அமேசான் நதி கடலில் கலக்கும் இடம், நல்ல நீராகவே இருக்கும்!’ ஆதிகாலத்தில் இறப்பு என்பதே இல்லை. வயதாக வயதாக மனிதர்கள் சுருங்கி, இறுதியில் அகல்விளக்கு வைக்கும் மாடக்குழியில் ஏறி அமர்ந்துவிடுவார்களாம். யாரும் இறக்காததால் பூமியின் பாரம் தாங்க முடியாமல், பூமாதேவி சிவனிடம் முறையிடுகிறார்.