

பாரதிக்குமாரின் ‘ஒரு துண்டு ரயில்’ என்ற இத்தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் இரண்டு வகைப்படுகின்றன. முதலாவது, பழைய விஷயங்களை, சரித்திரக் குறிப்புகளை அல்லது பழைய அபூர்வமான தருணங்களை மையமாக வைத்து அதன் சூழலையும் வாழ்வியல் மதிப்பையும் கதைகளாக மாற்றுவது.
இரண்டாவது, நிகழ்கால வாழ்வில் உள்ள அம்சங்களை விவரிப்பது. இத்தொகுப்பில் முதல் வகைக் கதைகளே நிறைய உள்ளன. அவை பெரிய பரிசுகள் பெறத் தகுதியானவை. சரித்திரக் குறிப்புகள் சார்ந்த கதைகளை எழுதும்போது, அந்தக் காலகட்டத்தின் மொழியையும் சூழலையும் கொண்டு வர அவர் எடுத்துக்கொண்ட உழைப்பு தனித்துத் தெரிகிறது.
மொழியை அப்போதைய சூழலுக்குத் தகுந்தபடி கையாள்கிறார். இன்றைய வாழ்நிலை சூழ்நிலையில் எதிர்கொள்ளும் தீவிரமான அனுபவங்களை சொல்வதற்கும், இந்தக் களத்துக்கான அவரது மொழி சரியாகப் பொருந்திப் போகிறது.