

தனிமனித நினைவுகளே மானுட வரலாற்றின் சேகரம். நினைவுகள் மூலமே மனிதவாழ்வு நிறைகிறது. நினைவென்பது நிலம் சார்ந்தது. நிலமென்பதில் சகலமும் அடங்கியிருக்கிறது. நிலம், தன்மீது நிகழும் மனிதகுல வாழ்வின் சாட்சியாக நிற்கிறது. ஒரே நிலம், காலத்தின் முடிவற்ற ஓட்டத்தில் புனிதமாக இருந்து அபுனிதமாவதைக் காண்கிறது.
தெய்வம் முளைத்தெழுந்த நிலத்தில் சாத்தான்களின் பிறப்பும் நிகழ்கிறது. பசி தீர்த்த நிலத்தில், மனித உயிரைக் குடிக்கும் கீழ்மையைக் காணலாம். தன்னுடைய அடையாளத்துக்கு எதிர்நிலை அடையாளத்தைக் காணும் துர்பாக்கியம் மணிபல்லவத்துக்கு நிகழ்ந்திருக்கிறது.
மணிமேகலை காப்பியத்தில், மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிச் சென்று விடுகின்ற இடமே மணி பல்லவம் எனும் நயினாத் தீவு.
மணிபல்லவத் தீவில் இருந்த பௌத்த விகாரம், புனிதமான போதிமரம், அதன் அருகில் இருந்த பௌத்த சேதியம் (புத்தரின் பாத பீடிகை) இருந்ததை மணிமேகலை சொல்கிறது.
அங்கிருந்த கோமுகி பொய்கையை வணங்கிய பிறகே ஆபுத்திரன் கையில் இருந்த அமுதசுரபி மணிமேகலையின் கைக்கு வருகிறது. மானுட குலத்தின் பசிப்பிணியைப் போக்க மணிபல்லவத்தில் இருந்து புறப்படுகிறாள் மணிமேகலை. மணிமேகலை காப்பியத்தின் திருப்புமுனை சம்பவம் நடந்த இடம் மணிபல்லவம்.