

மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழா, ராணி சீதை அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள் கி.விட்டல் ராவ், அம்ஷன் குமார் ஆகியோருக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதை வழங்கினார். அருகில் கவிஞர் ரவிசுப்ரமணியன். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: எழுத்தாளர்கள் விட்டல் ராவ், அம்ஷன் குமார் ஆகியோருக்கு 2026-ம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகளை, உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் வழங்கினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவனின் தந்தையும், மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளருமான மா.அரங்கநாதனின் நினைவை போற்றும் வகையில் ‘முன்றில்’ இலக்கிய அமைப்பு சார்பில் 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 16-ம் தேதி மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ் இலக்கிய உலகின் சிறந்த ஆளுமைகளை தேர்ந்தெடுத்து இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு நீதிபதி மகாதேவன் தலைமை தாங்கி, இந்த ஆண்டுக்கான விருதுகளை மூத்த எழுத்தாளர், ஓவியர் மற்றும் கலை விமர்சகர் கி.விட்டல்ராவுக்கும், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஆவணப்படக் கலைஞருமான அம்ஷன் குமாருக்கும் வழங்கி கவுரவித்தார். விருதுடன் இருவருக்கும் தலா ரூ.1 லட்சத்துக்கான ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் நீதிபதி மகாதேவன் பேசியதாவது: கலாச்சாரத்தாலும், பண்பாட்டாலும் தனித்துவமிக்கது தமிழ்மண். இந்த மண்ணின் பெருமை எடுத்து சொல்வதற்கு அளவற்றது.
இந்த தமிழ் மண்ணின் மேதமை மிக்க எழுத்து ஆளுமை என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்ட அரங்கநாதனின் பெயரால் இன்றைக்கு எழுத்தாளர்கள் விட்டல் ராவ், அஷ்மன் குமார் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
விட்டல் ராவின் சிறுகதைகள் கணக்கில் அடங்காதவை. கட்டுரை தொகுதிகள் கணக்கில் அடங்காதவை. அதேபோல் உலக திரைப்படங்களின் தன்மையை, போக்கைஉணர்ந்து, இந்த மண்ணை சார்ந்தவர்கள் நல்ல படைப்புகளை தர வேண்டும் என்கிற சிந்தனையோடு, வணிக தன்மை இல்லாமல் தன் பாதையை மாற்றியமைத்த படைப்பாளி அம்ஷன் குமார்.
ஆவணப்படங்களை எவ்வாறு எடுக்க வேண்டும் என்றுபல்வேறு இளைஞர்களுக்கு இவர் கொடுத்த பயிற்சி நல்ல நல்ல ஆவணப்படங்களாக மாறி இன்று நிற்கின்றன. விருதுபெற்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார். இந்நிகழ்வில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான ரவி சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.