

‘நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள்’ தலைப்பே புதுமையாக உள்ளது. எழுத்தாளர் பாவண்ணன் பணிநிமித்தம் கர்நாடகப் பகுதியில் வாழத் தொடங்கியபோது, கன்னட மொழியைப் பேச்சு மொழியாக உள்வாங்கிடக் கேட்டு மகிழ்ந்த கதைகளின் தொகுப்பு இது.
நாட்டுப்புற வழக்காறுகள் மக்களின் ஆழ் மனதில் நினைவுகளாகத் தங்கியவை. துங்கபத்திரை நதிக்கரையின் அடித்தள உழைக்கும் மக்களின் கதைகள் இவை. ‘நாட்டார் வழக்காறு’ என்பதில் உள்ள ‘நாட்டாருக்கு’ நிலவியல் எல்லையை வரையறுத்து விட முடியாது. இக்கதைகளைக் காவிரி, வையை, பொருநை, சிந்து, கங்கை, வால்கா, தேம்ஸ்... என உலகின் எந்த நதிக்கரை மக்களுக்கும் உரியதாகக் கொள்ளலாம், ஒரு சில கதைகளில் வரும் கன்னடப் பெயர்கள் தவிர்த்து.
இருபத்து ஐந்து கதைகள்; ஐந்நூறு பக்கங்கள். அளவில் பெரியவையாக, சங்கிலித் தொடர் நிகழ்வுகளின் தொகுப்பாக பல கதைகள் உள்ளன. இவை மொழிபெயர்ப்பு போன்றோ, மொழியாக்கம் போன்றோ இல்லை. தேர்ந்த கதை சொல்லியான பாவண்ணன் ஒவ்வொரு கதையிலும் தனிச் சுவையும், ஈர்ப்பும் அமையச் செய்துவிட்டார்.