

கவிதைப் புத்தகங்களை வாசிக்கக் கையிலெடுக்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும். மேலோட்டமாக வார்த்தைகளை அசைபோடுவதில் தொடங்கி ஒவ்வொரு வார்த்தையையும் மனதுக்குள் ஓவியமாக வரைந்து பார்த்து ஊஞ்சலாட்டுவது வரை பலவிதமாக அது விரியும்.
எளிய, சிறிய வார்த்தைகளால் கோக்கப்பட்ட ம.விஜய்யின் ‘இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம்’ கவிதைத் தொகுப்பும் அந்த வரிசையில் சேரக்கூடியது.
ரயில்வே சிக்னலைக் கடந்து செல்கிற பட்டாம்பூச்சி, ‘இமயம் சரிந்தது’ என்றிருக்கும் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள், பஞ்சுமிட்டாய் வண்ணத்திலிருக்கும் பழைய பேருந்துச் சீட்டு, சாம்பிராணிப் புகை இடுபவர், தேநீர்க் குவளைச் சூட்டை உள்வாங்குபவர், மூட்டை தூக்கும் தொழிலாளி, கோபமுற்ற கடவுள் எனப் பலரைத் தன் கவிதைகள் ஊடே நடமாடவிட்டிருக்கிறார் கவிஞர்.