

77ஆவது குடியரசு நாள் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாடு குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நாளே குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது. மக்களுக்கான அடிப்படை உரிமைகள், ஒவ்வொரு தரப்பினருக்குமான சட்ட உரிமைகள் ஆகியவை அரசமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளன.
விடுதலை பெற்ற இந்தியாவுக்கு வடிவம் கொடுப்பதிலும், நாட்டை சரியான பாதையில் செலுத்துவதிலும் அரசமைப்பின் பங்கை மறுக்க முடியாது. இந்திய அரசமைப்பு சமீப காலமாக பொது விவாதங்களில் அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்றாகி இருக்கிறது. அரசமைப்பு முன்வைத்த விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்கிற முழக்கங்களும் தொடர்ச்சியாக ஒலித்துவருகின்றன.