

தமிழ்நாடு எனும் மாநிலம் தனிநபர் வருமானம், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்த, முன்னேறிய, இரண்டாவது பணக்கார மாநிலமாகத் திகழ்ந்துவருகிறது. பொருளாதாரத்தையும் சமூக முன்னேற்றத்தையும் சமநிலையில் கொண்டுசெல்வதில் தனக்கெனத் தனித்துவமான பாதையை வகுத்துக் கொண்ட மாநிலம் இது.
வணிக சமூகங்கள் மட்டுமே தொழில் துறையில் கோலோச்சிய போக்கை இடைமறித்து, தமிழகத்தின் ஒவ்வொரு 50-வது கிலோமீட்டரிலும் ஒரு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் 1970களிலேயே தமிழக அரசால் வகுக்கப்பட்டது. இதன் மூலம், இன்று இந்தியாவிலேயே மிக அதிகமாக 38,837 தொழிற்சாலைகளுடன் தொழில் துறை வளர்ச்சியில் முதலிடத்தைத் தமிழ்நாடு பிடித்திருக்கிறது.