

உரைநடை வடிவத்தைத் தொடர்ந்து உருவான சிறுகதையே நவீன இலக்கியத்தின் தொடக்கக் கட்டம் அல்லது புத்தெழுச்சி எனலாம். அதுவரை இருந்த வரையறைகளை எல்லாம் தகர்த்து, கற்பனைத் திறன் கொண்ட எளிய படைப்பாளர்களும் எழுத்துலகுக்குள் கால் பதித்தனர்.
காலவோட்டத்தில் உள்ளடக்கத்திலும், கருத்தியலிலும், வடிவத்திலும் பற்பல புதிய முயற்சிகளை எழுத்தாளர்கள் நிகழ்த்தி வருகின்றனர். அவை உடனடியாகவோ காலங்கடந்தோ வாசகர்களால் கொண்டாடப்படுகின்றன.
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் தாக்கம். ஆங்கில, ரஷ்ய, பிரெஞ்சு, அராபிய, ஸ்பானிய, கறுப்பின எழுத்துகள் இந்திய – தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம்.
இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்படும் படைப்புகளின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அவற்றின் முக்கியத்துவம் அளப்பரியது. அந்த வகையில், சமகால தெலுங்கு எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பாக வெளியாகி இருக்கிறது இந்நூல்.