

சங்க இலக்கியங்கள் சமூக வாழ்வின் சாட்சியங்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயற்கையும் மனிதனும் இசைவாய் வாழ்ந்ததன் அடையாளம் சங்க இலக்கியப் பனுவல்கள். தமிழ்க் கல்வி எல்லைகளைத் தாண்டிய பிற துறை அறிவு வெளிச்சம் சங்க இலக்கிய ஆய்வுகளை மேம்படுத்தின எனலாம்.
அவ்வகையில் அடிப்படையில் இயற்பியல் பேராசிரியரான சு. இராமசுப்பிரமணியன் எழுதிய ‘சங்க இலக்கியத்தில் பண்டைத்தமிழர் வாழ்வியல்’ எனும் இந்நூல் சமகால சமூக வாசிப்பாக அமைகிறது. இந்நூலில், 484 பக்கங்களில் அமைந்த 50 கட்டுரைகள், சங்க இலக்கியப் பாடல்களை நுட்பமாக வாசித்து, இன்றைய காலத்தன்மையோடு ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளன.
இயற்கை அறிவியல் கூறுகள் தமிழர் வாழ்வோடு இயைந்து சென்றமையை அழகாகச் சுட்டுகிறார். நிலம், நீர், தாவரங்கள், விலங்குகள் குறித்த பதிவுகளை அறிவியலும் மானிடவியலும் சார்ந்து விளக்கப்படுத்துகிறார். புழங்கு பொருள்கள், உணவு, வழிபாடு, சடங்குகள், வழக்காறுகள் முதலியவை பண்பாட்டு வாழ்வாக உருக்கொள்வதை மிக இயல்பாகச் சுவைபட கூறுகிறார்.