

இதிகாசங்களிலும் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ள தர்ம நெறிகளை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம். கல்வி பயிலும் மாணவர்களுக்குச் சிறுவயதிலேயே ஆத்திச்சூடி போன்ற நீதிநூல்களைக் கற்பித்தால் அவற்றில் உள்ள நல்ல செய்திகள் அவர்களின் மனதில் பதியும். அவர்களது வாழ்க்கைப் பாதை அறவழியில் நிச்சயமாகச் செல்லும்.
சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அறநெறிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், காஞ்சி ஸ்ரீமடம் முனைப்புடன் இருப்பது அனைவரும் அறிந்ததே. தமிழில் உள்ள நீதிநூல்களில் சிறப்பிடம் பெறுவதான திருக்குறளில் மாணவர்கள் பயிற்சியும் தேர்ச்சியும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி முதலானவற்றை ஸ்ரீமடம் நடத்தியுள்ளது.
திருக்குறளுக்கு உரிய பழைய உரைகளைத் தொகுத்து, புலவர் வே.மகாதேவனால் இயற்றப் பெற்ற ‘திருக்குறள் உரைக்கோவை’ என்ற நூல், நூறு குறட்பாக்களுக்குரிய விளக்கங்களுடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பில் 2 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் அறத்துப்பாலின் கீழ் உள்ள அதிகாரங்கள் முழுமையாக அலசி ஆராயப்படுகின்றன. இலக்கியச் செய்திகள் மட்டுமல்லாமல் பல இலக்கணச் செய்திகளும் நூலில் நயம்பட எடுத்துக் கூறப்பட்டுள்ளன.