

சூடாமணி நினைவு அறக்கட்டளை சார்பில், சூடாமணியின் சிறுகதைகள் அடங்கிய “விருந்தினர்களில் ஒருவன்” தொகுப்பு நூல் வெளியீட்டு விழா, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ‘இந்து’ என்.ராம் நூலை வெளியிட்டார். கல்கி முன்னாள் ஆசிரியர் சீதா ரவி, எழுத்தாளர் ராஜகோபாலன், சூடாமணி நினைவு அறக்கட்டளை நிர்வாகி கே.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆர்.சூடாமணி நினைவு அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் சூடமணியின் 20 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பான ‘விருந்தினர்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ‘இந்து’ என்.ராம் பங்கேற்று நூலை வெளியிட்டார். மேலும் நிகழ்ச்சியில் கல்கி முன்னாள் ஆசிரியர் சீதா ரவி, எழுத்தாளர் ஜா.ராஜகோபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். எழுத்தாளர் சூடாமணியின் புத்தகங்களை மொழிபெயர்த்தவர்கள், ஓவியம், திரைப்படம் போன்ற கலை வடிவம் கொடுத்தவர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, ஆர்.சூடாமணி நினைவு அறக்கட்டளை நிர்வாகி பாரதி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய ‘இந்து’ என்.ராம் பேசியதாவது: சூடாமணியின் படைப்புகளில் சிலவற்றை தமிழிலும், அதிகம் ஆங்கிலத்திலும் படித்துள்ளேன். ஒரு ரூபாய் கூட வீணடிக்காமல் இந்த அறக்கட்டளையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த அறக்கட்டளை உதவிகள் செய்வதை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்பட்டாலும், சூடாமணியின் படைப்புகளை பாதுகாத்து, இன்றும் வாழும் எழுத்தாளராக சூடாமணி இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளனர்.
எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனுக்கும், சூடாமணிக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இருவரின் எழுத்துகளிலும் ஆழமான கருத்துகள் இருக்கும். சூடாமணி உடல்நிலை காரணமாக அதிகம் வெளி உலகத்தை பார்க்காதவர். ஆனால் எப்படி பல நுட்பமான, ஆழமான கருத்துகளை தனது எழுத்துகளில் கொண்டு வந்தார் என ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
என்னை பொறுத்தவரை சூடாமணி தைரியமான எழுத்தாளர், பெரிய தாக்கம் ஏற்பட வேண்டும் என்று இல்லாமல், தீவிரமான கருத்துகளை கவனமாக கையாண்டு, எதையும் மிகைப்படுத்தாத எழுத்தாளர். சூடாமணியின் எழுத்துகள் நீண்ட நாட்கள் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கல்கி முன்னாள் ஆசிரியர் சீதா ரவி பேசுகையில், “பெண் எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும் தனக்கென தனி பாணியை கொண்டவர் சூடாமணி. பல குடும்பங்களின் கதைகளை உண்மைக்கு நெருக்கமாக தனது எழுத்துகளில் கொண்டு வந்தவர். சாதாரண மணிதர்கள்தான் அவரது கதையின் நாயகர்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ராஜகோபாலன், “நவீன இலக்கியத்தின் கருத்துகளை வணிக இலக்கியத்தின் வடிவில் தனது படைப்புகளில் கொண்டு வந்தவர். சூடாமணியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வைத்து பார்க்க முடியாது. அவரின் வாழ்க்கை ஒரு தேவதையின் வாழ்க்கை, அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. ஆனால் குடும்பங்களின் நுட்பங்களை தனது எழுத்துகளில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். மனித வாழ்வின் அனைத்து விசித்திரங்களை பற்றி எழுதியவர்” என்றார்.