

வெற்றுப் பெருமிதங்களை உதறி எறிந்துவிட்டு உள்ளூர் வரலாற்றைச் சரிவரத் தேடும் ஒருவரால்தான் உலக வரலாற்றை, உலக வாழ்க்கையைத் தெளிவாகக் கண்டுணர முடியும் என்பதற்கு போர்ஹே ஒரு தெளிந்த முன்மாதிரி. சர்வாதிகாரிகளின் கொடூரக் கரங்களிலிருந்து விடுபடத் துடித்த லத்தீன் அமெரிக்க வரலாறு, போர்ஹேக்களைப் பிரசவித்தது.
போர்ஹேவின் கவிதைகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டதல்ல. அதேநேரம் தொன்மமும் இணை ஆறாகப் பாய்ந்துவருவதைக் காணமுடியும். ‘இரவின் வரலாறு’ கவிதை தொன்மத்தை ஆழமாகப் பேசினாலும், ‘ப்ரூக் ஸ்பினோசா’ என்ற கவிதை கடவுள் உருவாக்கத்தைத் துல்லியமாகப் பதிவு செய்கிறது. இதில், ‘மனிதன் ஒருவன் கடவுளை உருவாக்கினான், காலம் அவரைச் சுமக்கிறது...’ என்கிறார்.
வேறுபல கவிதைகளில், புத்தரின் கல்தேவாலய நிழலின் அருகமை, முகமது நபியின் மானுட நேயம், கிரேக்க, ஐஸ்லாந்திய வீரகாவியங்களின் தொன்மங்கள், யூதர்களின் சாயலில் கடவுள் உருவான தாத்பர்யம், இந்தியாவின் புனித நதிகள் என்றெல்லாம் கடவுளர்களுக்கு நெருக்க மானவற்றைச் சொல்கிறார்.