

இலங்கையில் போருக்குப் பிந்தைய மக்கள் வாழ்க்கையைப் பேசும் இலக்கியச் சான்றாக ‘அம்மன் மரம்’ நாவல் வெளிவந்துள்ளது.
அரசியல், இயக்கம், பரவலான சமூக வாழ்க்கை என்றெல்லாம் விரியாமல், தனிமனிதர்களின் குடும்பப் பின்னணியிலிருந்து குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வியலின் தற்கால நிலையை இந்நாவல் அலசுகிறது.
நாவலின் கதை மாந்தர்கள் பலரும் சிறு இலட்சியங்களுக்காக, தங்களையே ஒப்புக்கொடுக்க சித்தமாக இருப்பவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் சென்றாலும், மீள முடியாத தோல்விப் பயணங்களாகவே முடிவதையும் தேர்ந்த உளவியல் அறிஞரைப் போல சித்தரித்துக் காட்டியுள்ளார் தமிழ்நதி.
கதைக் களத்தின் மையச் சரடாக வரும் அருந்தவராணி தனது தாய்வீட்டை விட்டு வெளியேறி அம்பலவாணனோடு வந்துவிடுகிறார். இளமையிலிருந்து அந்திமம் வரை அவரது வாழ்க்கை அவருடனேயே இழுத்துச் செல்லப்படுகிறது.