

புத்தகங்கள் எப்போதும் ஒருவரோடு முடிந்துவிடுவதில்லை. ஒருமுறை வாங்கிய புத்தகம் பல தலைமுறைகளால் வாசிக்கப்பட்டுப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தனியார் சேகரங்கள், நூலகங்களின் பங்கைப் போல மிக முக்கியமானது பழைய புத்தகக் கடைகளின் பங்கு.
எல்லோராலும் புதிய புத்தகம் வாங்க முடியாது. அந்த நிலையில், பயன்படுத்தப்பட்ட புத்தகங்களுக்கான சந்தை மிகப் பெரியது. ஆனால், அது முறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் சோகம். முன்பெல்லாம் சிற்றூர்களில்கூடப் பழைய புத்தகக் கடைகள் காணப்பட்டன. இன்று, சென்னை போன்ற ஒருசில நகரங்களில் மட்டுமே பழைய புத்தகக் கடைகள் காணப்படுகின்றன.
தீ விபத்தில் அழிந்துபோன பழைய மூர்மார்க்கெட், பழைய புத்தகங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக இருந்தது. இன்றைக்கு அதுபோன்ற இடங்களில்கூடப் பழைய புத்தகம் விற்போர் அரிய உயிரினமாக மாறிவருகிறார்கள். சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் முன்னாள் முதல்வர் அண்ணா உள்ளிட்டோருக்கு அரிய புத்தகங்களை விற்றவர் ஆழ்வார். அவரது புத்தகக் கடை என்பது நடைபாதைக் கடைதான். அவருக்கு அரசு சார்பில் நிரந்தர இடம் தருவதாகக் கூறப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் அரசுக் கடைகள், அடுக்குமாடிக் கடைகள் நிறைய இருக்கின்றன. பழைய புத்தகம் விற்போருக்கு இவற்றைத் தரலாம். பாண்டி பஜார் நடைபாதைக் கடை விற்பனையாளர்களுக்குத் தந்ததைப் போலப் பழைய புத்தக விற்பனையாளர்களுக்கும் தனி அடுக்குமாடிக் கடைகளைக் கட்டித்தரலாம்.
பபாசி (தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கம்) அமைப்பும் இவர்களுக்கு உதவலாம். சென்னையிலும் பிற இடங்களிலும் நடக்கும் புத்தகக் காட்சிகளில் பழைய புத்தகங்களுக்கென்று இலவசமாகவோ, மலிவுக் கட்டணத்திலோ அரங்குகள் ஒதுக்கலாம்.
உ.வே.சா. போன்ற அறிஞர்கள் பல்வேறு தனியார் சேகரங்களிலும் பரண்களிலும் கிடந்த ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து நம் பழந்தமிழ் இலக்கியத்துக்கு உயிரூட் டினார்கள். அதேபோல, அச்சுப் பதிப்பில் வந்து காலத்தின் புதை மணலில் புதைந்துபோன பல்வேறு புத்தகங்களைப் பழைய புத்தகக் கடைகளில்தான் பல ஆய்வாளர்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள். இன்று அரிய நூல்களின் சேகரமாக உருவெடுத்திருக்கும் ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக’த்தின் நூல்களில் கணிசமானவை ரோஜா முத்தையா என்ற புத்தகக் காதலர் பழைய புத்தகக் கடைகளில் ஏறி இறங்கிச் சேகரித்தவையே. பல்வேறு தனியார் நூலகங்களும் அப்படித்தான்.சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் பழைய புத்தகங்களையும் பழைய புத்தக விற்பனையாளர்களையும் நடைபாதையிலேயே நாம் வைத்திருக்க முடியாது. பொது நூலகங்களைப் போலவே பழைய புத்தகச் சந்தைக்கும் புத்துயிர் அளிக்க வேண்டியது அரசின் கடமை!