

‘தமிழர் தகவல்’ இதழ் 32 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது. ‘தமிழர் தகவல்’ புதிய குடிவரவாளர்களுக்கும், ஏற்கெனவே குடியேறி குடியுரிமை பெற்றவர்களுக்கும் இன்னும் பலவேறு நாட்டுத் தமிழர்களுக்கும் தகவல்களை இலவசமாக வழங்கியபடியே தொடர்கிறது. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களும் நடைமுறைகளும் மாறியபடியே இருக்கும். அவற்றை உடனுக்குடன் மக்களுடன் பகிர்ந்துகொள்வதுடன் தனிப்பட்ட ஆலோசனைகளையும் ‘தமிழர் தகவல்’ குழு செய்துவருகிறது. ‘தமிழர் தகவல்’ பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. இவர்களில் கணிசமானவர்கள் சொந்தமாகப் புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த 32 ஆண்டுகளில் 30 ஆண்டு மலர்களைத் ‘தமிழர் தகவல்’ சஞ்சிகை வெளியிட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் கரோனாப் பேரிடர் காரணமாக மலர் வெளியீடு தள்ளிப்போடப்பட்டது. 30ஆவது ஆண்டு மலர் முன்னெப்போதையும்விடச் சிறப்பாக ‘இளமகிழ் சுவடு’ என்னும் பெயரில் வெளிவந்திருக்கிறது. 216 பக்கங்கள் கொண்ட இந்த மலரில், இளையோரும் முதியோரும் பிறநாட்டு அறிஞர்களும் கட்டுரைகள் சமர்ப்பித்துச் சிறப்பித்திருக்கிறார்கள்.
444 வருடத் தமிழ் நூல்: பொ.ஆ. 1578இல் வெளியிடப்பட்ட தமிழின் முதல் அச்சு நூல் தற்காலத் தமிழில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘தம்பிரான் வணக்கம்’ என்னும் தலைப்பிலான இந்நூலை ஏசுதாஸ் சாலமன் பதிப்பித்துள்ளார்.
போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய நூலின் தமிழாக்கமே இந்நூல்.