Last Updated : 17 May, 2016 12:45 PM

 

Published : 17 May 2016 12:45 PM
Last Updated : 17 May 2016 12:45 PM

நான் என்ன படிக்கிறேன்? - இயக்குநர் லிங்குசாமி

என் அம்மா ஒரு கதைசொல்லி. தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதையைச் சொல்லித்தான் தூங்க வைப்பார். எனக்குள்ளிருக்கும் கதையாளனை முதலில் அடையாளங்காட்டியது அம்மாதான். நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது மளிகைக் கடையில் பழைய வார இதழ்களை எடைக்குப் போடுவார்கள். அதைப் பொட்டலம் மடிக்க வசதியாக, நடுவில் இருக்கும் பின்னை நான்தான் எடுப்பேன். அழகாகப் பல வண்ணப் படங்களுடன் இருக்கும் வார இதழ்களின் பக்கங்களே முதலில் எனக்கு வாசிப்பு ருசியை அறிமுகம் செய்துவைத்தன. பிறகு வார இதழ்களைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் சேர்ந்த பிறகே, எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு உருவானது. எப்போதும் இலக்கியம் சார்ந்து உரையாடும் நண்பர்கள் வட்டமும் என்னைச் சுற்றி அமைந்தது என் வாசிப்பு மேம்படுவதற்கு வழிவகுத்தது.

என்னை மிகவும் ரசிக்க வைத்த எழுத்து சுஜாதாவுடையது. இப்போது எடுத்துப் படித்தாலும், நம்மைக் கூடவே கைப்பிடித்து அழைத்துச்செல்கிற வசீகரமான எழுத்துக்குச் சொந்தக்காரர் அவர். தமிழில் வெளிவரும் நல்ல நூல்களை அது கதை, கவிதை என எதுவாக இருந்தாலும் வாங்கி, வாசித்துவிடுவேன்.

தொன்மையான நம் பழங்கதைகளைக் கேட்பதிலும் படிப்பதிலும் எனக்கு தீராத ஆர்வமுண்டு. இராமாயணம், மகாபாரதம் கதைகளை மீண்டும் வாசித்துவருகிறேன். ஒவ்வொரு எழுத்தாளரின் பார்வையிலும் இந்த கதைகள் எவ்வாறு பார்க்கப்பட்டுவருகின்றன என்பதைக் கூர்ந்து கவனித்துவருகிறேன்.

சமீபத்தில், கவிஞர் பிருந்தா சாரதி எழுதிய ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்’ கவிதை நூலை வாசித்தேன். ‘நடைவண்டி’ என்கிற கவிதை நூலை 1992-ல் வெளியிட்ட பிருந்தா சாரதி, கால் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பைத் தந்திருக்கிறார். பிருந்தா சாரதி எனும் கவிஞனுக்குள் இருக்கும் ஈரம், இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் உலராமல் இருப்பதை அறிந்துகொண்டேன்.

எளிமையான நேர்மொழியில், சுருக்கமாய் இருப்பதே இவரது கவிதைகளின் சிறப்பு. இந்தத் தொகுப்பின் 73 கவிதைகளும் தனித்தன்மையோடு எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கவிதையும் ஏதேனும் ஒரு பொருள் பற்றி, இதுவரை சொல்லப்படாத புதிய கோணத்தில் பதிவாகியுள்ளன.

இந்நூலிலுள்ள பல கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ‘அந்நியமாதல்’ என்றொரு கவிதை: ‘வெட்டப்பட்ட ஆட்டுத்தலை / வெறித்துப் பார்க்கிறது / தோலுரித்துத் / தொங்கவிடப்பட்டிருக்கும் / தன் உடலை.’ இந்த ஒரு கவிதையே சொல்லும் இந்தத் தொகுப்பின் அடர்த்தியை. நூலெங்குமிருக்கும் ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் கோட்டோவியங்களும் ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லுகின்றன. டிஸ்கவரி புக் பேலஸ் இதனைச் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.

ஒரு புத்தகமும் நாமும் மட்டுமே தனியே இருப்பதுபோலான சந்தோஷத்தை வேறெதுவும் தந்துவிட முடியாது. ஒரு புத்தகம் நமக்கு காட்டும் உலகமும், புத்தகத்தின் வழியே நாம் பெறும் வாசிப்பு இன்பமும் அளவிட முடியாதவை. ஒரு நல்ல கவிதையை வாசித்துவிட்டால், புதிதாய் ஏதோவொன்றைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தை இப்போதும் நான் அடைகிறேன். நெருக்கடியான பல்வேறு வேலைகளுக்கிடையிலும் என்னைப் புத்துணர்ச்சியோடு வைத்திருப்பவை புத்தகங்கள்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x