

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர் ரமேஷ் பிரேதன். முன்பு எழுத்தாளர் பிரேமும் இவரும் இணைந்து ‘ரமேஷ்-பிரேம்’ என்ற பெயரில் இரட்டை எழுத்தாளர்களாக சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று இயங்கிவந்தனர். பிறகு, இருவரும் பிரிந்து தனித்தனியாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ரமேஷ் பிரேதன் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுக் கைகால்கள் முடங்கிய நிலையிலும், மிகவும் சிரமத்துடன் இயக்கத்தில் உள்ள சில விரல்களைக் கொண்டு கணினியில் தட்டச்சு செய்துதான் தன் படைப்புகளை உருவாக்கிவருகிறார்.
உடல் முடங்கினாலும் அவரது படைப்புச் செயல்பாடு முடங்கவில்லை. சமீபத்தில்கூட ‘மார்கழிப் பாவியம்’, ‘அருகன்மேடு’ (இரண்டும் ‘யாவரும் பப்ளிஷர்ஸ்’ வெளியீடு) உள்ளிட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தனியாக வசிப்பவர். அவருடைய நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இப்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் எனினும் மேலதிகச் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படும் நிலையில்தான் இருக்கிறார்.
ஐ.சி.யூ.வுக்கான ஒருநாள் கட்டணமே ரூ.12,000 என்றும், இதயத்தில் இருந்த அடைப்புகளை அகற்றுவதற்குச் செலுத்தும் ஊசியின் விலை ரூ.40,000 என்றும் சொல்லப்படுகிறது. மருத்துவச் செலவுக்காக நிதி திரட்டும் முயற்சியில் நண்பர்கள் சிலர் ஈடுபட்டுவருகின்றனர். இது முதல் முறை அல்ல. பல எழுத்தாளர்களுக்குப் பல முறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது. எழுத்தாளருக்கோ அவருடைய குடும்பத்தினருக்கோ பெரும் உடல்நலக்கேடு என மருத்துவமனைக்குச் சென்றால், பெரும்பாலும் கையிருப்பை மொத்தமும் கரைக்க வேண்டியுள்ளது. அல்லது நண்பர்களின் உதவியை நம்பிக் காத்திருக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், அருமையான திட்டம். அதேபோல், எழுத்தாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பத்து லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுமாயின், அவர்கள் இம்மொழிக்கு ஆற்றிய பங்களிப்புக்குச் செய்யும் எளிய மரியாதையாக இருக்கும். எழுத்தாளர்கள் நிமிர்வுடனும் நிம்மதியாகவும் கவலையின்றியும் தொடர்ந்து பங்களிக்க முடியும்.
இதன் நடைமுறைச் சாத்தியங்களை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசியல் சார்புகளுக்கு அப்பால் அனைத்துத் தரப்பிலும் உள்ள எழுத்தாளர்களுக்கும் இது சென்று சேர வேண்டும். உலகில் தனியார் அமைப்புகள், சங்கங்கள் இத்தகைய சில ஏற்பாடுகளைத் தங்கள் உறுப்பினர்களுக்கு உருவாக்கித் தந்துள்ளன. ஆனால், நானறிந்தவரை எங்குமே அரசு நேரடியாக அவர்களுக்கென காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் நிகழ்ந்தால் இது ஒரு முன்மாதிரியாகவும் இருக்கும். அது, எழுத்தாளர் ரமேஷ் பிரேதனிடமிருந்து தொடங்கட்டும்!
- சுனில் கிருஷ்ணன, ‘அம்புப் படுக்கை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், ‘யுவபுரஸ்கார் விருது’ பெற்றவர், ஆயுர்வேத மருத்துவர். தொடர்புக்கு: drsuneelkrishnan@gmail.com