

பள்ளித் தலைமையாசிரியராக இருந்து மாவட்டக் கல்வி அதிகாரியாக ஓய்வுபெற்ற என் தந்தையார் வழியாகத்தான் வாசிப்பு எனக்கு அறிமுகமானது. 85-வது வயதில் அவர் இறந்த அன்று பிரித்துப் படிக்கப்படாமலேயே வாசலில் ‘தி இந்து’ பத்திரிகை இருந்தது. வாசிப்பில் எனக்கு அளவற்ற ஆர்வம் ஏற்பட அப்பாதான் முதற்காரணம்.
பள்ளிப் படிப்பை முடித்த விடுமுறையில்தான் முதன்முதலாக நான் நாவல் படிக்க ஆரம்பித்தேன். அது மலிவுப் பதிப்புகள் வெளிவரத் தொடங்கிய காலம். திருச்சியில் புகழ்பெற்ற ‘பழனி அன்கோ’ புத்தகக் கடையில் நேருவின் ‘உலக சரித்திரம்’ (மொழிபெயர்ப்பு: ஒ.வி.அளகேசன்) இரு தொகுதிகள் வாங்கினேன். ஒவ்வொரு தொகுதியும் 900 பக்கங்கள். ஓரிரு வாரங்களில் படித்து முடித்தேன். வரலாற்று நூல்களைப் படிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டிய அந்த நூலை இன்றும் ஞானாலயா நூலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றேன்.
வ.ரா.வின் ‘பாரதியார் சரித்திரம்’ இன்றுவரை தொடர்ந்து படித்து மகிழத் தக்க நூலாகும். பாரதியாரின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கத்தை அவரது கட்டுரைகளும் ஏற்படுத்தின. பாவேந்தர், கவிமணி, நாமக்கல் கவிஞர் இவர்களைத் தொடர்ந்து, ச.து.சு.யோகி, கண்ணதாசன் என்று தொடர்ந்து சிற்பி, மேத்தா போன்றோரின் புதுக்கவிதை நூல்களும் பெரிதும் கவர்ந்தன.
தமிழகத்தின் சமூக, இலக்கிய, அரசியல் வரலாற்றை அறிய வாழ்க்கை வரலாற்று நூல்களே மிகவும் உதவியாக இருக்கின்றன. உ.வே.சா.வின் ‘என் சரித்திரம்’, திரு.வி.க.வின் ‘வாழ்க்கைக் குறிப்புகள்’, ம.பொ.சி.யின் ‘எனது போராட்டம்’, நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’, ஜெயகாந்தனின் அனுபவ நூல்கள் முதலியவை அவரவர் வாழ்ந்த காலகட்டத்தின் கண்ணாடிகளாய் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்களும், வெ. சாமிநாத சர்மாவின் ‘கிரீஸ் வாழ்ந்த வரலாறு’, ‘ருஷ்ய வரலாறு’ உள்ளிட்ட பல நூல்கள் உலகளாவிய அறிவை விசாலப்படுத்தும் நூல்களாகும்.
அகிலன், நா.பார்த்தசாரதி, கல்கி, மு.வ, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சுந்தர ராமசாமி, எம்.வி.வெங்கட்ராம் போன்றோரின் நூல்களைக் கையில் எடுத்தால் படித்து முடிக்கும்வரை கீழே வைக்க முடியாது. அப்படியான நூல்களையெல்லாம் விடாமல் தேடிப்பிடித்து படித்தேன். தொ.மு.சி.ரகுநாதனின் ‘முதல் இரவு’ நாவலும், கு. அழகிரிசாமியின் சிறுகதை நூல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் ஜெயமோகனின் ‘முதற்கனல்’, எஸ். ராமகிருஷ்ணனின் ‘உப பாண்டவம்’ போன்றவற்றைப் படித்து அனுபவித்தேன்.
சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ஏ.கே.செட்டியாரின் ‘புண்ணியவான் காந்தி’யையும், காந்தியின் சுயசரிதையின் முதல் பாகமான ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்’ என்ற நூலையும் மறுபடியும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆழமான வாசிப்பும், தொடர்ந்து அதைப் பற்றிய சிந்தனையும் தேடலும் அறிவை விசாலப்படுத்துகின்றன; மனதைப் பண்படுத்துகின்றன. மேலும், மனிதர்களை மனிதாபிமானம் கொண்டவர்களாக மாற்றுகின்றன. இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு?
-கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்