

களப்பணியில் 13 ஆண்டுகள் ஈடுபட்டுப் பத்திரிகையாளர் ஜெயராணி எழுதிய ‘ஜாதியற்றவளின் குரல்’ கட்டுரைத் தொகுப்பைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாடு எவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்தாலும் சாதிய ஒடுக்குமுறைகள் இன்னமும் இங்கு தலைவிரித்துதான் ஆடுகின்றன. இந்தியா முழுக்க இருக்கும் தலித் மக்களின் வாழ்வையும், அவர்கள் மீதான ஒடுக்குதல்களையும் எவ்விதப் போலித் தன்மையுமின்றி எடுத்து வைக்கிறது இந்த நூல்.
‘உப்பு நிறத்தில் கூந்தல்’ எனும் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். வெவ்வேறு காலகட்டங்களை, வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மூன்று நபர்களின் கதை இது. அவர்கள் சந்திக்கும் பெண்ணின் கூந்தல் சார்ந்த கதை. 80 ஆண்டுகள் நீளும் கதை. 1940-களில் நாடகங்களில் ஸ்திரீபார்ட் வேடம் தரிக்கும் ஒருத்தன் பிரயாசைப்பட்டு வளர்க்கும் கூந்தலும் ஒரு பாத்திரமாக இடையே வருகிறது .