

திரையுலக மேதை சத்யஜித் ரேயின் நூற்றாண்டு இது. அதைச் சிறப்பிக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது
‘தி சினிமா ஆஃப் சத்யஜித் ரே’. எழுத்தாளரும் திரைக்கதையாளருமான பாஸ்கர் சட்டோபாத்யாய எழுதியிருக்கிறார். இந்தியத் திரையுலகத்துக்கு உலக அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தவர் சத்யஜித் ரே. புவியியல்-பண்பாட்டு வேறுபாடுகள் மட்டுமில்லாமல், காலத்தைத் தாண்டி அவருடைய படங்கள் ரசிக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம் அந்தப் படங்களின் எளிமையும், கலை என்பது சிலருக்கு மட்டுமே புரிவதாக இருக்கக் கூடாது என்பதில் ரே கொண்டிருந்த கவனமும்தான் என்கிறார் பாஸ்கர்.
அதே நேரம் அவருடைய படங்கள் வெறும் தத்துவ ஆராய்ச்சியாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ சுருங்கிவிடவில்லை. ராய் இரண்டையும் சமநிலையுடன் அணுகி, எதைக் கவனப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்ததாக பாஸ்கர் கூறுகிறார். இந்த நூலில் சத்யஜித் ரே இயக்கிய 39 திரைப்படங்கள் குறித்துத் தனித் தனி அத்தியாயங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ரேயுடன் பணிபுரிந்த/அவரைப் பின்தொடரும் திரைப் பிரபலங்களான அபர்ணா சென், ஷர்மிளா தாகூர், ஷியாம் பெனகல், விக்கிரமாதித்தய மோட்வானே உள்ளிட்டோர் ரேயைப் பற்றி அளித்துள்ள விரிவான நேர்காணல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. சத்யஜித் ரேயின் படங்களுக்குள் பயணிக்க விரும்புபவர்கள் கையில் இருக்க வேண்டிய அவசிய வழிகாட்டி.
தி சினிமா ஆஃப் சத்யஜித் ரே
பாஸ்கர் சட்டோபாத்யாய
வெஸ்ட்லேண்ட்
நான்-பிக் ஷன்