Published : 13 Feb 2016 10:51 AM
Last Updated : 13 Feb 2016 10:51 AM

நான் எப்படிப் படிக்கிறேன்? - பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார்

அம்மாவிடம் இருந்துதான் எல்லாமே ஆரம்பித்தது. அம்மா எப்போதும் வாசித்துக்கொண்டேயிருப்பாள். அவள் வீணையில்லாத சரஸ்வதி. திருப்பாவை, திருவெம்பாவை என எல்லாமும் பாடுவாள்.

வீட்டில் ‘தி இந்து’, ‘தினமணி’, ‘கல்கி’, ‘விகடன்’, ‘மஞ்சரி’, ‘அமுதசுரபி’, ‘அம்புலிமாமா’, ‘பாரதியார் கவிதைகள்’, ‘சத்திய சோதனை’, ‘பொன்னியின் செல்வன்’ இப்படி வாசிக்க ஏராளம் இருந்தது. எப்பொதும், வேலையின் அவசரத்தில் இருக்கும் அப்பா, கழிப்பறைக்குப் போகும்போதுகூட எதாவது புத்தகத்துடன்தான் போவார்.

வசிப்பதற்கென்று தனியாக அறைகள் ஏதும் இல்லாத ஒரு சின்ன வீட்டில்தான் குடியிருந்தோம். என்றாலும், எல்லோரும் எதையாவது வாசித்துக்கொண்டே இருந்த வீடு. எப்பொதும் வாசித்துக்கொண்டே இருப்பதற்கான ஒரு வாழ்க்கை அமைந்தது ஒரு ஆசீர்வாதம்தான்.

பள்ளியிலும், கல்லூரியிலும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என எது வந்தாலும் பேர் கொடுத்துவிட்டு, வீடு வந்து அதற்கெனத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டபோது வாசிப்பின் எல்லை மேலும் விரிந்தது. பிறந்து வாழ்ந்த மதுரையில் அக்காலத்தில் நடந்த எல்லா இலக்கியக் கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகளுக்கும் அம்மா அழைத்துக்கொண்டு போய்விடுவாள். தமிழின் ஆகப் பெரும் ஆளுமைகளின் உரைகளைக் கேட்டதும் வாசிப்பின் மீதான காதல் பெருகி வளர்ந்தது. எட்டயபுரம் மகாராஜாவுடன் சென்னைக்குப் போன பாரதி, மகாராஜா கொடுத்த அத்தனை பணத்துக்கும் புத்தகங்களையே வாங்கிக்கொண்டு போன கதையை அடிக்கடி அம்மா சொல்வாள். புத்தகங்கள் தரும் செல்வம் அழிவற்றது என்பது அந்த வயதிலேயே மனதில் நிலைத்துப்போனது.

கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று பரந்து விரிந்து வாசிக்கத் துவங்கிய காலத்தில் தான் இன்றைய செம்மலர் ஆசிரியர். எஸ்.ஏ.பெருமாள் அறிமுகமானார். சந்திக்கும்போதெல்லாம், வாசிக்கவென்று சில புத்தகங்களைத் தந்துவிட்டு, அடுத்த சந்திப்பில் அப்புத்தகங்களைப் பற்றி அவர் உரையாடத் துவங்கியது வாசித்தே தீர வேண்டிய கட்டாயத்தை வாழ்க்கையாக்கிவிட்டது.

புத்தகங்களை அக்றிணைப் பொருட்கள் என யார் சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு மனதின், அறிவின் மகரந்தங்களை இன்னுமொரு மனித மனதிற்கு, அறிவிற்குக் கொண்டுசேர்க்கும் ‘தேனீக்கள்’ புத்தகங்கள்.

பத்திரிகைகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மணி நேரமேனும் புத்தக வாசிப்புக்கு என்று ஒதுக்கிவிட வேண்டும் என்று நினைப்பவன் நான். அது முடியாமல் போகும் நாட்களின் நேரத்தை வாய்ப்புக் கிடைக்கும் வேறொரு நாளில் சேர்த்து வாசித்துவிடுவேன்.

என் அனுபவத்தில் வாசிப்புக்கும் மேலான சிறப்புடையது மறுவாசிப்பு. ஏற்கெனவே வாசித்த நல்ல புத்தகங்களை மீண்டும் படிக்க நேரும் தருணங்கள் அற்புதமானவை. ஒரே புத்தகம் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அனுபவங்களை மறுவாசிப்பில் தரும்.

காலத்தில் உறைந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எப்போது எனக்கு உண்டு. ஒரே மேடைப் பேச்சாளனாக, ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களை என் பேச்சின் வழியே கடத்த நினைக்கிறேன். அதற்கு உதவும் மிகச் சிறந்த கருவி வாசிப்பு!

எந்தச் சமூகத்தில் வாசிப்பில்லையோ, அந்தச் சமூகம் தன் காலத்திடமிருந்து தானே பிரிந்து, விலகிக் கிடக்கிறது. ஒரு சமூகம் பாகுபாடுகளற்ற சமூகமாக உருக்கொள்வதற்கு, அந்தச் சமூகம் தெளிந்த நல்லறிவு கொண்ட சமூகமாக இருத்தல் வேண்டும். தெளிந்த நல்லறிவு வாசிப்பிலே இருந்து வருகிறது.

வாசிப்பதென்பது காலத்தை அறிவது.

வாசிப்பதென்பது காலத்தைக் கடப்பது.

வாசிப்பதென்பது காலத்தை உருவாக்குவது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x