Last Updated : 05 Jun, 2021 06:53 AM

 

Published : 05 Jun 2021 06:53 AM
Last Updated : 05 Jun 2021 06:53 AM

நூல்நோக்கு: தடைபடாத நீரோட்ட அழகு

க.மோகனரங்கன். இந்தப் பெயர் ஒரு மந்திரச் சொல். நினைவில் சட்டென நிதானத்தைக் கொண்டுவரும் தன்மை கொண்ட எழுத்துக்காரர். தூரிகைகளும் வர்ணங்களும் இல்லாது நம்முள் சித்திரங்களை வரைந்துசெல்லும் கவிமொழிக்காரர். தற்பெருமையும் தளும்புதலும் இல்லாது மொழிக்கு வளமை சேர்த்தபடியே இருப்பவர். நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரை நூல்கள், ஒரு கதைத் தொகுப்பு, இரு மொழிபெயர்ப்பு நூல்கள் என இவரின் பங்களிப்புகள் காத்திரமானவை.

வரப்பில் இருக்கும் புல்லை அறுத்துச் சீர்செய்தபடியே இருக்கும் தாத்தாவிடம், “தண்ணியோடத்தானே போகுது, எதுக்கு ஓயாம அதுகூட மல்லுக்கட்டுறீங்க” என்றேன். “தடைபடாத தண்ணியோட்டம் ஒருவித அழகுடா” எனக் கூறி அந்த வேலையைத் தொடர்ந்தார். க.மோகனரங்கனின் சமீபத்திய கவிதை நூலான ‘கல்லாப் பிழை’ தொகுப்பை வாசிக்கத் தொடங்கியதும் இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. பிடித்த பாடலுக்கு மனம் தானாய்த் தாளமிடும், இல்லையா? இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகளுக்கு மனம் தாளமிட்டவாறு இருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

‘வாசனை’ கவிதை வரைந்த பூக்கட்டும் பெண் தொடங்கி ‘கிளிப்பெண்’ணோடு கூடடைந்தது நல்ல அனுபவம். மலையில்/ ஏறும்போது/ மருளவும்/ மலரில்/ ஊறும்போது/ மயங்கவும்/ தெரியாத/ எறும்பிற்குத்/ திறந்திருக்கிறது/ எல்லாத் திசைகளிலும்/ பாதைகள். ‘திறப்பு’ கவிதையானது எறும்பைச் சாவியாக்கி நம்முள் மூடுண்ட கதவுகளைத் திறக்கச் செய்திடுகிறது. இரண்டு கால்களும்/ இரண்டு கைகளும்/ எவ்வளவு உழைத்தும் போதவில்லை/ ஒரு வயிற்றுக்கு... என்று நீளும் ‘நடைவழி’ கவிதையோ கரோனா காலத் துயர்களின் சாட்சியாக நிற்கும். அசையாத உறுதியையும், அவசரமில்லாத நிதானத்தையும் புழுவாக ஊர்ந்து வாழ வழிகாட்டும் ‘அடங்கல்’ கவிதை ஞானத்தின் திறவுகோலாகிறது. எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருந்துகொண்டிருக்கும். அந்தக் குழந்தையை மொழியானது எப்போதாவது வெளிக்கொணர்ந்துவிடும்.

மது விடுதியில் வேலை பார்க்கும் சிறுவனின் பையிலிருந்து சிதறிய கோலிக்குண்டுகளை எல்லோரையும் பொறுக்கித்தரச் செய்த யூமா வாசுகியின் கவிதையை நினைவூட்டிய ‘நிறைதல்’ கவிதையானது, தரை தாழவிடாமல் வண்ண பலூனை ஏந்தச்செய்தது. இந்தக் கவிதையின் நீட்சியாக ‘ருசி’ கவிதையும் நம்மை வாழச்செய்கிறது. அப்பாவின் நினைவில் எழுதப்பட்ட ‘வழி’ கவிதையை வாசித்து இரங்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.

‘கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி’ எனத் தொடங்கும் பாடலில் இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து, அதன்படி வாழ்வை நடத்தாமல் இருப்பதைக் கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார். க.மோகனரங்கனின் ‘கல்லாப் பிழை’யோ நிழலாய் உடன் நிற்கும் வாழ்வின் மீதான பிடிப்பை இணக்கமாகச் சொல்லிச் செல்கிறது.

கல்லாப் பிழை
க.மோகனரங்கன்
தமிழினி வெளியீடு
விலை: ரூ.90
தொடர்புக்கு: 86672 55103

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x