

சமீபத்தில், மதுரையில் நடைபெற்ற நண்பரின் மகள் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது திருமண மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும் சிலர் புத்தகம் படித்தபடி அமர்ந்திருந்த கட்சி சற்றே வினோதமாய்த் தெரிந்தது. மண்டபத்தை விட்டு வெளியே வரும்போது, மணவீட்டார் தந்த தாம்பூலப் பை சற்றே வித்தியாசமாகத் தெரிய, உடன் பிரித்துப் பார்த்தேன். உள்ளே அழகான சிறிய புத்தகமொன்று.
‘சிறகடிப்பு’ (கொஞ்சம் கவிதைகள், கொஞ்சம் சிறுகதைகள்) எனும் தலைப்பில் ஜெயகாந்தன், அம்பை உள்ளிட்டோரின் சிறுகதைகளும், தேவதச்சன், கல்யாண்ஜி, சமயவேல் உள்ளிட்டோரின் கவிதைகளும் கொண்ட அழகிய மணவிழா பரிசுதான் அந்தப் புத்தகம்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடைபெறும் திருமண விழாக்களில் தாம்பூலப் பைகளில் புத்தகப் பரிசும் இடம்பெறுவதை இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இப்படியான நூல்களை மண விழாக்களுக்கென்று தொகுத்து, நூலாக்கித் தரும் பணியைப் பெருவிருப்பத்தோடு செய்துவரும் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பல்லூடக ஆய்வு மையத்தின் தயாரிப்பாளரும் கவிஞருமான ஸ்ரீரசா என்கிற சு. இரவிக்குமாரிடம் இது குறித்துக் கேட்டபோது, “செட்டிநாட்டுப் பகுதியில் நடைபெறும் திருமண விழாக்களில் தாம்பூலப் பைகளோடு புத்தகமொன்றையும் தருகிற நல்ல பழக்கம் இருந்தது. நான் சென்ற திருமணமொன்றில் ‘பட்டினத்தார் பாடல்கள்’ எனும் நூலைத் தந்தார்கள்.
இப்போது அந்தப் பழக்கம் அழிந்துவிட்டது. புத்தக வாசிப்பைத் தூண்டும் வகையில் நாமும் இப்படிச் செய்யலாமென்று யோசித்தேன். புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ள சில நண்பர்கள் இதற்கு உடனே சம்மதித்தார்கள். அவர்களது இல்ல விழாக்களுக்கு இதுவரை 40-க்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். 16 பக்கங்கள் தொடங்கி, 100 பக்கங்கள்வரை வருகிற நூல்களும் உண்டு. இப்படி வழங்கப்படும் புத்தகங்கள் பலரையும் புத்தக வாசிப்பை நோக்கி ஈர்த்திருக்கின்றன.
என் மகள் திருமணத்துக்கு வழங்கிய புத்தகத்தைப் படித்துவிட்டுக் கறிக்கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் வீடு தேடி வந்து பாராட்டியதோடு, தங்களது நண்பர்களுக்கும் படிக்கக் கொடுக்க வேண்டுமென்று 10 புத்தகங்களைக் கேட்டு வாங்கிப் போனார். ஏதோ ஒரு திருமணத்தில் பரிசாக வழங்கப்பட்ட புத்தகத்தில் இருந்த எனது ‘இறுகப் பற்று’ எனும் கவிதையை வாசித்த யாரோ ஒருவர், அதனை மதுரை லேடி டோக் கல்லூரியில் கடந்த 8 ஆண்டுகளாகப் பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருப்பதை சமீபத்தில்தான் நானே தெரிந்துகொண்டேன்.
இப்படிப் பலரையும் புத்தகம் வாசிக்க தூண்டும் பணியை நம் வீட்டு விழாக்களில் தரும் புத்தகங்கள் செய்கின்றன. பாடப் புத்தகங்கள் தவிர வேறெந்தப் புத்தகத்தையும் இதுவரை படித்திராத குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆகியோரின் கைகளில் சென்றுசேரும் இந்தப் புத்தகங்கள் வாசிப்புக்கான புதிய வாசலைத் திறக்கின்றன” என்று கூறினார்.
- மு.முருகேஷ்