

சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களைத் தவிர சிறுநகரங்களில் நவீன நாடகங்கள் அதிகம் நிகழ்த்தப்படுவது இல்லை. சென்னையிலும்கூட இதற் கான பார்வையாளர்கள் குறைவு. பொரு ளாதாரரீதியான உதவிகளும் கிடைப்பது இல்லை. ஆனாலும், கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக தீவிரமான கருப் பொருட்களை முன்வைத்து, தமிழ் நவீன நாடகங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
சினிமாவுக்கு யார் ஒளிப்பதிவு செய் கிறார்கள் என நம் அனைவருக்கும் தெரியும். முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பெயர் திரையில் தோன்றியவுடன் பார்வையாளர்கள் கைதட்டிக் கொண் டாடுகிறார்கள். ஆனால், நாடகங்களுக்கு யார் ஒளியமைப்பு செய்கிறார்? எவ்வாறு ஒளி பயன்படுத்த படுகிறது? எந்த வகை தொழில்நுட்பங்களைக் கையாள்கிறார்கள்? நாடக மேடை ஒளியமைப்பின் சிறப்புகள் எவை என நாம் அறிந்துகொள்வதே இல்லை. அரங்கச் செயல்பாட்டில் ஒளியின் பங்கு மிக மிக முக்கியமானது ஆகும்.
பேராசிரியர் செ.ரவீந்திரன், புது டெல்லியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன நாடகங்களுக்கு ஒளியமைப்பு செய் வதில், அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருபவர். நாடக ஒளியமைப்பு குறித்த விவரங்களை ஒன்றுதிரட்டி அவர் தொகுத்த ‘ஒளியின் வெளி’ என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்கது. நான் அறிந்தவரை நாடகத்தின் ஒளியமைப்பு குறித்து தமிழில் வெளியாகியுள்ள ஒரே புத்தகம் இது மட்டுமே!
இந்நூலை ‘மாற்று வெளியீட்டகம்’ 2009-ல் வெளியிட்டுள்ளது. இதில் அரங்க ஒளியமைப்பு குறித்து மு.நடேஷ், சா.வேலாயுதம், ஞா.கோபி, கோவி. கனகவிநாயகம் ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அத் துடன் செ.ரவீந்திரனின் உரையாடலும் இடம்பெற்றுள்ளது.
சிறுகதை எழுத்தாளரான ந.முத்து சாமி அயானஸ்கோவின் அபத்த நாடகத் தில் உத்வேகம் பெற்று ‘நாற்காலிக்காரர்’, ‘காலங்காலமாக’, ‘அப்பாவும் பிள்ளை யும்’, ‘சுவரொட்டிகள்’ போன்ற நவீன நாடகங்களை எழுதி நிகழ்த்தினார். 1977-ம் ஆண்டு ந.முத்துசாமியால் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளியான ‘கூத்துப்பட்டறை’ உருவாக்கப்பட்டது. அது நவீன நாடகத்துக்கான மையப் புள்ளிகளில் ஒன்றாக உருமாறியது.
இதுபோலவே புதுடெல்லி தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற பேராசிரியர் ராமானுஜம், தமிழ்நாட்டுக்கு வந்து 1977-ல் அவர் காந்தி கிராமத்தில் நடத்திய 45 நாள் நாடகப் பட்டறையும் தமிழ் நாடகத்துக்குப் புதிய வாசலை திறந்துவிட்டது. வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் மூலம் தமிழகத்துக்கு அறிமுகமான வீதி நாடகங்கள் ‘மூன்றாம் அரங்கு’ என்ற புதிய நாடக இயக்கத்தை உருவாக்கியது. இதுபோலவே நவீன நாடகத்துக்கு என்றே வெளி ரங்கராஜன் ‘நாடகவெளி’ என்ற இதழை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
நவீன நாடகங்களின் மேடை அமைப்பு, நடிப்பு முறை, காட்சி அமைப்பு, வசனங்கள் யாவும் மரபு நாடகங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டவை. நாட்டார் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், வரலாற்று உண்மைகளைப் புதிய கண்ணோட்டத்தில் மறுஉருவாக்கம் செய்வது, சமூக அரசியல் பிரச்சினை களை விமர்சனம் செய்வது, காலனிய மயமாக்கம், சுற்றுச்சூழல், நீதி, கல்விச் சூழல், பண்பாட்டு மாற்றங்கள், பாலின அரசியல் ஆகியவற்றைச் சார்ந்து நவீன நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
ந.முத்துசாமி, பேராசிரியர் ராமானு ஜம், மு.ராமசாமி, மங்கை, பிரளயன், கே.ஏ.குணசேகரன், பேராசிரியர் ராஜு, ஆறுமுகம், பென்னேஸ்வரன், வெளி ரங்கராஜன், சண்முகராஜன், ஆடுகளம் ராமானுஜம், கே.எஸ்.ராஜேந்திரன். பாரதி மணி, ஞாநி, கருணாபிரசாத், பார்த்திப ராஜா, முருகபூபதி, பிரவீண், ஜெயக் குமார், குமரவேல், ஜெயராவ், வேலு சரவணன், சுந்தர்காளி, ஆ.ராமசாமி, ப்ரஸன்னா ராமசாமி, குமரன் வளவன், ஜித் என பல்வேறு நாடக இயக்குநர் கள் தனித்துவத்துடன் பல புதிய நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்கள். இந்த நாடகங்களில் சில இந்திய அளவில் கவனம் பெற்றதோடு, சர்வதேச நாடக விழாவிலும் பங்கேற்றுள்ளன.
நாடகங்களுக்கான ஒளியமைப்பு செய்வதில் பேராசிரியர் ரவீந்திரனின் தனித்துவத்தையும், நவீன ஓவியர்களான கிருஷ்ணமூர்த்தி, மருது, மற்றும் மு.நடேஷ் ஆகியோர் தமிழ் நாடக உலகோடு கொண்டிருந்த உறவைப் பற்றியும், புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமி கள் நிகழ்கலைப் பள்ளி மாணவர்கள் அரங்க ஒளியமைப்பில் எப்படி தம்மை ஆட்படுத்திக் கொண்டனர் என்பதையும் இந்நூல் விவரிக்கிறது என முன்னுரையில் டாக்டர் வீ. அரசு சுட்டிக்காட்டுகிறார்
18-ம் நூற்றாண்டுவரை அரங்க நிகழ்வுகள் எல்லாம் மெழுகுவத்தியின் ஒளியில், காஸ் லைட்டுகளின் பின் புலத்தே நிகழ்த்தப்பட்டன. மின்சாரத்தின் வருகைக்குப் பிறகு அரங்க நிகழ்வுகளில் ஒளியின் பயன்பாடு மாறியது. வெளிச்சத்தை கூட்டவோ, குறைக்கவோ செய்யக்கூடிய டிம்மர்களின் தேவை உருவானது. அதிலிருந்து இன்று கம்ப்யூட்டர் வழியாக முப்பரிமாண ஒளியமைப்பு செய்வது வரை அரங்கச் செயல்பாட்டில் ஒளியின் பங்கு பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைத் துறையில் ஒளியமைப்பு ஒரு பாடமாகவே வைக்கப்பட்டுள்ளது.
நேர் ஒளி மற்றும் நிரப்பொளி எனும் இரு தடங்கள் நாடகத்தைத் தீர்மானிக் கின்றன. நடிகன் மேல் வீசப்படும் ஒளியை மெதுவாக வீசுவதா, அல்லது கோணங்களை மாற்றுவதா, நிறத்தை மாற்றுவதா என தீர்மானிப்பது முற்றிலும் மனம் சார்ந்த கணக்கு. கதை சொல்லுதலின் வடிவமாக ஒளியை மாற்ற வேண்டும். நிறங்களும் அர்த்தமும் சில சமயம் சேர்ந்து பயணிக்கும். சில சமயம் முரண்படும். இவை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு அன்றைய நாடகத்தின் கதை, ஆழம், அர்த்த வீச்சுக்கு ஏற்றது போல ஒளிக் கலைஞன் பயணிக்க வேண்டும். கதையம்சத்தில் மூழ்கும்போது, ஒளி ஒரு சக நடிகனைப் போலவே பணிபுரியும் வாய்ப்பு உள்ளது என்கிறார் ஓவியரும் அரங்க ஒளியமைப்பாளருமான மு.நடேஷ்.
நாடகவெளியில் ஒளிவண்ணங்கள் உருவாக்கும் மாற்றம் பாத்திரத்தின் உணர்வு வெளிப்பாட்டுடன் நெருங்கிய தொடர்புகொண்டது. மகிழ்வு உணர்ச்சி யின் அடிப்படை கதகதப்பான ஆரஞ்சு நிற வண்ணமாகும். இளம் ஊதா வண்ண ஒளி சுறுசுறுப்பு மற்றும் மலர்ச்சி யின் வண்ண வெளிப்படாகும். ஊதா ஒருவித மனசோகத்தை வெளிப் படுத்தக்கூடியது என்கிறார் கோவி.கனகவிநாயகம்.
செ.ரவீந்திரன் தனது உரையாடலில் 1972-ம் ஆண்டு புதுடெல்லியில் பார்த்த அல்காசி இயக்கிய ஐயனெஸ்கோவின் நாடகம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அந்த தேடலே தன்னை ஒளியமைப்பு செய்பவராக உருமாற்றியது. ந.முத்து சாமியோடு இணைந்து நாடகங்களில் பணியாற்றியது புதிய சாத்தியங்களை மேற்கொள்ள முக்கிய காரணமாக இருந்தது என நினைவுகூர்கிறார்.
தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நவீன நாடகங்கள் நிகழ்த்தப் பட்டு வந்தபோதும் நாடகத்துக்கு என பிரத்யேகமான அரங்கு சென்னையில் இல்லை. நவீன நாடகக் குழுவினர் ஒத்திகை நடத்த இடமின்றி பெரிதும் சிரமப்படுகிறார்கள். அதிலும் சிறிய நாடகக் குழுக்களுக்கு நாடகம் நடத்து வதற்கே இடம் கிடைப்பதில்லை. நாடக நூல்களை வாசகர்கள் கண்டுகொள் வதே இல்லை.
‘அறிவொளி’ இயக்கம் வீதி நாடக வடி வத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சென்றது. கோமல் சுவாமி நாதன் முயற்சி யால் ‘சுபமங்களா’ நாடக விழா மதுரை, கோவை, திருச்சி, சென்னை என பல இடங்களில் சிறப் பாக நடைபெற்றது. அது போன்ற முன்னெடுப்புகள் இன்று அவசியமான தேவையாக உள்ளது.
- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
முந்தைய அத்தியாயம்: >வீடில்லாப் புத்தகங்கள் 48: ரத்த சாட்சியம்!