

திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வந்திருந்தாலும், எனது சிறுவயது நாட்களில் ஆண்டாளின் திருப்பாவையையும், ஆழ்வார்களின் பாசுரங்களையும் கேட்கவும் படிக்கவுமான சூழல் வாய்த்தது. பத்திரிகையில் தொடராக வந்த கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’யை, சிவப்புக் கலர் அட்டை போட்டு வைத்திருந்த நூலை, அப்பா என்னிடம் வாசிக்கக் கொடுத்தார். திராவிட இயக்க வரலாற்றைத் தேடிப் படிக்கும் எண்ணத்தை இந்த நூல் எனக்குத் தந்தது. பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் இரு நூல்களும் என்னை வெகுவாய் ஆட்கொண்டவை.
இலக்கியம், வரலாறு என்பவற்றைத் தாண்டி எனக்குக் கானுயிர் நூல்களைப் படிப்பதில் எப்போதுமே கூடுதல் ஆர்வ முண்டு. தியோடர் பாஸ்கரன், மா.கிருஷ் ணன் போன்றோரின் எழுத்துக்கள் நான் இயற்கை சார்ந்த நூல்களைப் படிக்க பெரும் தூண்டுதலாக இருக்கின்றன. சமீபத்தில் படித்ததில் சசி வாரியார் எழுதி தமிழில் இரா.முருகவேள் மொழிபெயர்த்திருக்கும் ‘தூக்கிலிடு பவரின் குறிப்புகள்’ நூலும், சொ.சாந்த லிங்கம், பொ. ராஜேந்திரன் எழுதிய ‘மாமதுரை’ நூலும் முக்கியமானவை.
நல்ல நூல்கள் எங்கு கிடைத்தாலும் தேடிப்போயாவது வாங்கிப் படித்து விடுவேன். சென்னை, மதுரை, ஈரோடு புத்தகக் கண்காட்சிகளுக்குப் பலமுறை சென்றிருக்கின்றேன். பரந்துபட்ட இந்த சமூகத்தை தெரிந்துகொள்ள கிடைத்திருக் கும் மிகப் பெரிய வாய்ப்புகளே நூல்கள். நூல்கள் என்பவை இந்த வாழ்வெனும் பெருவெளியைக் கடப்பதற்கு நமக்குக் கிடைத்திருக்கும் சிறகுகள் என்றே சொல்வேன்.