

காரோனாவின் தனிமைக் காலத்தைப் பலரும் புத்தக வாசிப்புக்குப் பயன்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. கருத்துச் செழுமைமிக்கதாக நம் சமூகம் உருவெடுக்கும் நம்பிக்கையை இந்நாட்கள் விதைக்கின்றன. ஏற்கெனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புத்தகங்களைச் சேமித்திருப்பார்கள். புதிதாக வாசிக்க நினைப்பவர்களுக்கு இந்தச் சமயத்தில் புத்தகம் கிடைப்பது சாத்தியப்படாது. அவர்களெல்லாம் நம்மிடம் புத்தகங்கள் இல்லையே என நினைக்க வேண்டாம். இணையத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன; இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன.
அயோத்திதாசர் சிந்தனைகள், பெரியார் குறித்த நூல்கள், பாரதியார், பாரதிதாசன் நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்துகள் மட்டுமல்லாமல், ஏராளமான அரிய தமிழ் நூல்களெல்லாம் தமிழ் இணையக் கல்விக் கழகத் தளத்தில் (http://www.tamilvu.org/library/) கிடைக்கின்றன.
நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை உள்ளிட்ட தமிழ் வரலாற்றாய்வாளர்கள் எழுதிய நூல்களும், 32 துறைகள் சார்ந்த 875 நூல்களும் இந்தத் தளத்தில் கிடைக்கின்றன.
வே.ஆனைமுத்து தொகுத்த பெரியார் சிந்தனைகளின் மூன்று தொகுதிகள் பல ஆண்டுகளாக அச்சில் இல்லை. இந்த நூலின் பிடிஎஃப் படிகளை ஆய்வாளர் பொ.வேல்சாமி பதிவேற்றியுள்ளார். இதை https://www.vinavu.com/2019/07/01/thoughts-of-periyar-evr-books-in-pdf-format/ என்ற பக்கத்திலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம்.
http://ambedkar.in/ambedkar/ தளத்தில் அம்பேத்கர் நூல்களும், https://www.tamildigitallibrary.in/ தளத்தில் காந்தி நூல்களும், http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/tamil/Karl Marx.html தளத்தில் மார்க்ஸிய நூல்களும் கிடைக்கின்றன. தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடுகள் https://www.tnarch.gov.in/e-publication-books இணையதளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. இலங்கைத் தமிழர்கள் நடத்தும் இரண்டு இணையதளங்கள்: http://www.noolaham.org, http://www.padippakam.com/.
தனிமைச் சூழலை வாசிப்புக்காகப் பயன்படுத்துவோம். கரோனா காலத்தில் ஒரு வாசகரிடமிருந்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உங்கள் வாசிப்புப் பழக்கம் தொற்றிக்கொள்ளட்டும்.
- அப்பணசாமி, ‘கொடக்கோனார் கொலை வழக்கு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: jeon08@gmail.com