உற்சாகம் கொப்பளிக்கும் ஈரோடு திருவிழா

உற்சாகம்  கொப்பளிக்கும் ஈரோடு திருவிழா
Updated on
2 min read

பத்து ஆண்டுகளில் பல லட்சம் வாசகர்களை ஈர்த்தும் உருவாக்கியும் வரும் பெருமையோடு 11-வது ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஜூலை 31-ல் தொடங்கியது. ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திருவிழா, 75 அரங்குகளுடன் தொடங்கி, தற்போது 230 அரங்குகளுடன் கூடிய பெருவிழாவாக மாறியுள்ள இந்த விழா, ஈரோடு வாசகர்கள் மட்டுமல்லாமல், மாநிலம் தழுவிய வாசகர்களின் விருப்ப விழாவாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுவரை தமிழகப் புத்தகக் காட்சிகளில் பங்கேற்றிருக்காத சில ஆங்கிலப் புத்தக நிறுவனங்களும் இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் பங்கேற்றிருப்பது சிறப்பு. இது போன்று பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு 6 லட்சம் வாசகர்களை ஈர்த்து, ரூ 6 கோடி மதிப்புள்ள நூல்கள் விற்பனையான சாதனையை, இந்த ஆண்டின் புத்தகத் திருவிழா முறியடித்துவிடும் என்கிறார்கள் மக்கள் சிந்தனைப் பேரவையினர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 5-ம் ஆண்டிலும், 10-ம் ஆண்டிலும் பங்கேற்றது புத்தகத் திருவிழாவின் பெருமையைக் கூட்டியுள்ளது.

நாள்தோறும் காலை 11 மணிக்கு உற்சாகத்தோடு தொடங்கும் புத்தகத் திருவிழா, இரவு 9:30 மணி வரை அதே உற்சாகத்துடன் தொடர்கிறது. அடுத்தடுத்து வரும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகளிலிருந்து இறங்கி அணிவகுக்கும் மாணவ, மாணவியரால் காலை நேரத்தில் உயிர்த் துடிப்பு பெறுகிறது புத்தகத் திருவிழா. அணு அறிவியல், சுற்றுச்சூழல், வாழ்க்கை வரலாறு, கதைகள் என்று அரங்குகளில் தேடித் தேடிப் பார்த்து வாங்கும் மாணவ, மாணவியர் கூட்டத்தைச் சமாளிப்பது அரங்கு பொறுப்பாளர்களின் அன்றாடச் சாதனை. அரங்குகளை விட்டுத் திரும்பும்போது அத்தனை பேர் கையிலும் இருக்கும் புத்தகங்கள் இளம் பட்டாளத்திடம் எவ்வளவு தேடலும் ஆர்வமும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன.

மாலை 4 மணி முதல் அனைத்து அரங்குகளிலும் அலைமோதத் தொடங்குகிறது கூட்டம். வேலை முடித்து வந்த களைப்பு முகங்களில் வெளிப்பட, சற்றும் சளைக்காமல் புத்தக வேட்டையாட ஏராளமானவர்கள் வருவதை நாள்தோறும் பார்க்க முடிகிறது.

பிரபல எழுத்தாளர்களின் நூல்களின் தலைப்பைச் சொல்லி விசாரிக்கும் குரல்கள், சத்தமில்லாமல் பல பக்கங்களைப் புரட்டிப் பார்த்துத் தேர்வு செய்யும் கூட்டம், இந்தப் புத்தகத்தைதான் வாங்க வேண்டும் என்று வந்தேன் எனச் சரியான பதிப்பக அரங்கில் கால் வைக்கும் வாசகர்கள், புரியாத புத்தகப் பெயர்களைச் சொல்லி அவை எங்கு கிடைக்கும் என்று பெற்றோரைக் குழம்ப வைக்கும் குழந்தைகள் என ஈரோடு புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் காட்சிகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஆனால், வாசகர்களின் முகங்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

தினமும் மாலை 6 மணிக்குத் தொடங்கும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள், நீதிபதிகள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்களை மேடையேற்றுவதன் மூலம் புத்தகத் திருவிழா அறிவுத் திருவிழாவாகப் பரிணாம வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

நுழைவுக் கட்டணம் இன்றிப் புத்தகத் திருவிழாவில் நுழைந்து, 10 சதவீதத் தள்ளுபடியில் புத்தககங்களை அள்ளிக்கொண்டு, சிந்தனை அரங்கில் சில மணி நேரங்களைச் செலவிட்டு, 12 நாட்களும் ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தை வட்டமிடும் புத்தகக் காதலர்கள் ஆகஸ்ட் 11-ம் தேதிக்குப் பிறகு தவித்துதான் போகப்போகிறார்கள். ஆம், அன்றுதான் ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவடைகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in