

அண்மையில் நான் வாசித்த தமிழ் நூல்களில் என்னைக் கவர்ந்தவை ஏ.கே. செட்டியாரின் பயணக் கட்டுரைகள், பிரபஞ்சனின் ‘சித்தன் போக்கு’, கண்ணதாசனின் ‘வனவாசம்’ ஆகியவை.
ஏ.கே. செட்டியார் தொகுத்த ‘தமிழ்நாடு - பயணக் கட்டுரைகள்' என்னும் நூல் (மறு வெளியீடு: சந்தியா பதிப்பகம்) மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
1968-ல் எழுதப்பட்ட இந்த நூலில், திருச்சியிலிருந்து சமயபுரம் போவதற்குக் குதிரை வண்டிக்காரரிடம் பேரம் பேசியது பற்றிய பகுதி வருகிறது. இன்றைக்கு ஆட்டோ என்றால் அன்று குதிரை வண்டி. பயணத்தில் பேரமும் வாக்குவாதமும் எப்போதும் நடப்பவைதான் என்பதை இதைப் படிக்கும்போது உணர முடிகிறது. அந்தக் காலத்தின் சமூக நடைமுறைகள், சூழல்கள் ஆகியவற்றைப் பற்றி மிகவும் சரளமாக எழுதப்பட்டிருக்கும் பதிவுகளைத் தொகுத்திருக்கிறார் ஏ.கே. செட்டியார்.
பிரபஞ்சனின் எழுத்தைப் படிப்பதற்கு முன்பு அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவர் பேச்சு வசீகரமானது. என்னுடைய நண்பரும் எழுத்தாளருமான சுரேஷ்குமார் இந்திரஜித், பிரபஞ்சனின் கதைகளை எனக்கு அறிமுகம்செய்துவைத்தார். பிரபஞ்சனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பான ‘சித்தன் போக்கு’ (காலச்சுவடு வெளியீடு) தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கும்போது ஒரு கதையைப் படிக்கும் உணர்வே தோன்றவில்லை. நிஜ வாழ்வின் அனுபவங்களைக் கதை வடிவில் எழுதியதுபோல இருக்கிறது. கதையை யதார்த்தமாக எழுதுவது
ஒரு வகை. இவர் யதார்த்தத்தைக் கதையாக எழுதுகிறார் என்று தோன்றுகிறது. ஜூலியன் பர்ன்ஸ் (Julian Barnes), இயான் மெக்வான் (Ian McEwan) போன்ற ஐரோப்பிய எழுத்தாளர்களின் எழுத்தை பிரபஞ்சனின் எழுத்து நினைவுபடுத்துகிறது.
கண்ணதாசனின் ‘வனவாசம்’ (கண்ணதாசன் பதிப்பகம்) என்னும் நூலையும் சமீபத்தில் படித்தேன். அவரது காலகட்டத்தின் அரசியல் வம்புகள் நூலில் கொட்டிக் கிடக்கின்றன. மிகவும் ரசித்துப் படித்த புத்தகங்களில் ஒன்று இது.
- அரவிந்தன்