

கடந்த காலத்துக்குள் நம்மை அழைத்துப் போவதற்கு கால இயந்திரம் தேவையில்லை. ஒரு கருப்பு - வெள்ளை புகைப்படம் போதும். இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்த மெட்ராஸ், மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களின் மிகப் பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
150 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் புகைப்படங்களை எடுத் தவர் லினியெஸ் டிரைப். (Linnaeus Tripe) இவர் ஒரு பிரிட் டிஷ் புகைப்படக் கலைஞர். 1838-ல் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பணியாற்றியவர். லண்டனில் புகைப்படக் கலையைக் கற்ற இவர், தென்னிந்தியாவில் சுற்றியலைந்து நிறையப் புகைப் படங்களை எடுத்திருக்கிறார்.
1857-ம் ஆண்டு, மதராஸ் அரசாங்கம் இவரை அதிகாரபூர்வ புகைப்பட நிபுணராக நியமித்தது. பொறியியல், விவசாயம், நுண் கலைகள், நிர்வாகம் சார்ந்த அரசுத் திட்டங்களுக்கு உதவி செய்வதற்காக இவர் நிறையப் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.
1857-ல் மதராஸ் போட்டோ கிராபிக் சொசைட்டி தொடங்கப்பட் டது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டாக்டர் அலெக்சாண் டர் ஹண்டர். இந்த சொசைட்டியின் தலைவராக இருந்தவர் வால்டர் எலியட்.
பெசண்ட் நகர் கடற்கரைக்கு ‘எலியட்ஸ் பீச்’ என்று இவரது பெயரைத்தான் வைத்துள்ளனர். வால்டர் எலியட்டுக்கு தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட ஒன்பது மொழிகள் தெரியும். சிவில் சர்வீஸ் அதிகாரியான இவர், சென்னை அரசாங்கத்தின் கவுன்சில் மெம்பராகவும் பதவி வகித்தவர்.
மதராஸ் போட்டோகிராபிக் சொசைட்டி ஆண்டுதோறும் புகைப் படக் கண்காட்சிகளை நடத்துவது வழக்கம். அதில் லினியெஸ் டிரைப் எடுத்த தமிழகத்தின் கலைக் கோயில்கள், அன்றாடக் காட்சி கள், தொழில்சார்ந்தப் பதிவுகளைக் கொண்ட 50 புகைப்படங்கள் சிறப்பு கண்காட்சியாக வைக்கப் பட்டுள்ளன.
லினியெஸ் டிரைப்பின் உதவி யாளராக இருந்த சி.அய்யாச்சாமி யும் சிறந்த புகைப்படக் கலைஞராக பணியாற்றியிருக்கிறார்.
அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தாலும் அவர் எடுத்த புகைப் படங்கள் எதுவுமே பாதுகாக்கப்பட வில்லை என்பதுதான் துயரம்.
100 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் வாழ்க்கை எப்படி இருந்தது? ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எப்படி பயணம் போனார்கள்? ஏழை, எளிய மக்கள் என்ன சாப்பிட்டார்கள்? கோயில் விழாக்கள் எப்படி நடந் தேறின? விவசாயிகள், கலைஞர் கள், சாமானிய மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்… என்பதைப் பற்றி எல்லாம் அறிந்துகொள்ள விரும் புகிற வர்கள் அவசியம் படிக்க வேண் டிய புத்தகம், ‘பியர் லோட்டி’ எழுதிய ‘ஆங்கிலேயர்கள் இல் லாத இந்தியா’. சந்தியா பதிப் பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தி ருப்பவர் சி.எஸ்.வெங்கடேஸ் வரன்.
பிரெஞ்சு நாவலாசிரியரான பியர் லோட்டியின் இயற்பெயர் ஜீலியன் வியாத். பிரெஞ்சு கடற்படையில் பணிபுரிந்த இவர், 1899-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். 2 ஆண்டுகள் இந்தியாவில் சுற்றித் திரிந்த தனது அனுபவங்களை துல்லியமாக ஒரு நாட்குறிப்பைப் போல பிரெஞ்சில் எழுதி வெளியிட்டார்.
1903-ம் ஆண்டு India என்ற இந்த புத்தகம் வெளியானது. கடல் வழியாகவும், தரை வழியாகவும் ரயில் மூலமும் இந்தியாவுக்குள் சுற்றியலைந்த பியர் லோட்டியின் பயணம், பாளையங்கோட்டை வழியாக திருவனந்தபுரம் செல்வதில் தொடங்கி ராஜஸ்தான், பனாரஸ் வரை நீண்டது.
ஒரு நாவலாசிரியர் என்பதால், தான் சந்தித்த மனிதர்களையும் இடங்களையும் நிகழ்வுகளையும் மிக துல்லியமாகத் எழுதியிருக் கிறார் பியர் லோட்டி. கவித் துவமான வரிகளும், உணர்ச்சி பூர்வமான பதிவும் இதை வெறும் வரலாற்றுக் குறிப் பாக மட்டுமின்றி, அழுத்தமான இலக்கியப் பதிவாகவும் மாற்றிவிடுகிறது.
திருவாங்கூர் மகாராஜாவின் விருந்தினராக அழைக்கபட்ட பியர் லோட்டி, பாளையங்கோட்டையில் இருந்து மாட்டு வண்டி மூலம் திருவனந்தபுரம் பயணம் செய்த காட்சியை வாசிக்கும்போது கண் முன்னே திரைப்படம் பார்ப்பது போலிருக்கிறது.
‘பாளையங்கோட்டையில் இருந்த விடுதி ஒன்றில் தங்கி யிருந்தேன். திருவாங்கூர் அழைத் துச் செல்ல இரண்டு வண்டிகள் வந்து நின்றன. ஒரு வண்டியில் இருந்த வெண்ணிறக் காளை களின் கொம்புகளில் நீலவண் ணம் அடிக்கபட்டிருந்தது. மாடு களுக்கு மூக்கணாங்கயிறு இடப்பட்டிருந்தது. வண்டி ஓட்டு பவன் இடுப்பில் சிறு துண்டு ஒன்றை மட்டுமே கட்டியிருந்தான். சர்க்கஸ் கலைஞனைப் போல அவன் வண்டியின் நுகத்தடி யில் உட்கார்ந்தபடியே வண்டி ஓட்டினான். பாளையங்கோட் டையில் இருந்து வண்டி கிளம்பி யது. வழி முழுவதும் மரங்கள். நிழல் நீண்ட பாதைகள்.
தொலைவில் நான் கண்ட விவசாயிகள் பெரும்பாலும் வெற்றுடம்புடன் இருந்தார்கள். அவர்கள் இடுப்பில் கோவணம் கட்டியிருந்தார்கள். சிலர் தலையில் தலைப்பாகை கட்டியிருந்தார்கள்.
- பியர் லோட்டியின் பதிவுகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com