

நரிக்குறவர்கள் பேசும் பாஷையின் பெயர் என்ன? அவர்கள் மொழிக்கு எழுத்து வடிவம் உண்டா ? நரிக்குறவர்களைப் பற்றி ஏதாவது புத்தகம் வெளியாகி உள்ளதா எனக் கேட்டு, ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
வீதியில் நரிக் கொம்பு விற்றுக்கொண் டும், பாசி மணி ஊசி மணி மாலைகள் விற்றுக்கொண்டும் அலையும் குறவர் களை சிறுவயது முதலே பார்த்திருக் கிறேன். ஆனால், அவர்கள் பேசும் பாஷையின் பெயர் என்னவென்று தெரியவில்லை.
புத்தகங்களின் தேவை என்பதே இது போல அறியப்படாத விஷயங்கள் குறித்து, நமக்கு அறிமுகம் செய்வதும் புரிந்துகொள்ள வைப்பதும்தானே! நரிக் குறவர்களைப் பற்றி என்ன புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன எனத் தேடத் தொடங்கினேன்.
பொதுவாக பழங்குடி மக்களின் வாழ்க்கை மற்றும் பண்பாடு குறித்து தமிழில் அதிக நூல்கள் இல்லை. அவர் கள் பொருளாதார ரீதியாகவும் பண் பாட்டு ரீதியாகவு மிகவும் ஒடுக்கப்பட்டு வருவது குறித்து பொதுவெளியில் கவனம் உருவாகவே இல்லை.
பிரிட்டிஷ்காரர்களும் மிஷனரி களுமே பழங்குடி மக்கள் குறித்த ஆய்வு களில் ஈடுபட்டிருக்கிறார்கள், சுதந்திரத் துக்குப் பிறகே மானுடவியல் ஆய்வாளர் கள் இந்தியாவின் பல்வேறு பழங்குடி மக்கள் குறித்து ஆராயவும், ஆவணப் படுத்தவும் தொடங்கினார்கள்.
‘எட்கர் தர்ஸ்டன்’ தொகுத்த ‘தென்னிந் திய குலங்களும் குடிகளும்’ என்கிற நூலில் தென்னிந்திய சாதிகள், மற்றும் பழங்குடி மக்கள் குறித்து நிறைய தகவல் கள் புகைப்படத்துடன் இடம் பெற்றுள் ளன. தர்ஸ்டன் சென்னை அருங்காட்சி யகத்தின் பொறுப்பாளராக இருந்த பிரித் தானியர். ஏழு தொகுதிகளாக வெளியாகி உள்ள இந்தப் புத்தகம் தென்னிந்திய மானுடவியலின் அடிப்படை நூலாகும்.
இது போலவே இருளர் இன மக்கள் குறித்து ‘சப்பெ கொகாலு’, ‘ஒடியன்’ என இரண்டு புத்தகங்களை எழுதியிருக் கிறார் லட்சுமணன். இருளர் மொழிக்கு ஒலி வடிவம் மட்டுமே உண்டு. வரிவடி வம் கிடையாது. தமிழ், தெலுங்கு, கன்னடம் கலந்தது அவர்களின் மொழி. இந்த மக்களுடன் பழகி, அவர்கள் நம்பிக்கைகளை, தொன்மங்களை. இசைப் பாடல்களைத் தொகுத்து லட்சு மணன் நூலாக வெளியிட்டிருக்கிறார்.
பிலோ இருதயநாத், தனது புத்தகம் ஒன்றில் நரிக்குறவர்கள் பற்றி சுவாரஸ்ய மான சில தகவல்களை எழுதியிருக் கிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கைமுறைகளை ஆராய்ந்து எழுதியவர் பிலோ இருதயநாத்.
ஒரு சைக்கிள், தலையில் தொப்பி, கருப்புக் கண் ணாடி, பாக்ஸ் டைப் கேமரா அணிந்த பிலோ இருதய நாத்தின் தோற்றம் தனித் துவ மானது. தொடக்கப் பள்ளி ஆசிரியரான இருதயநாத், தனது விருப் பத்தின் காரணமாக இந்தியா முழுவ தும் உள்ள பழங்குடி மக்களைத் தேடிச் சென்று ஆராய்ந்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். வேடந் தாங்கல் பறவைகள் சரணாலயத்தை உலகறியச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
பிலோ இருதயநாத், தனது கட்டுரை யில் தமிழ் இலக்கியத்தில் வரும் குறவர் கள் வேறு, தமிழகத்தில் வசிக்கும் குறவர்கள் வேறு. இவர்கள் குஜராத்தில் இருந்து தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.
குறவர்கள் பேசும் மொழியான ‘வாக்ரி போலி’ மொழிக்கு எழுத்து வடிவமே கிடையாது. அது ஹிந்தி, உருது, குஜராத்தி மொழிகளின் கலப்பு எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறவர்கள் தங்கள் இனத்துக்குள்ளா கவே திருமணம் செய்துகொள்வார்கள். வெளியாட்கள் குறப் பெண்ணை திருமணம் செய்துகொண்டால், அவளை தங்கள் இனத்துக்குள் சேர்க்க மாட்டார் கள். இனத் தூய்மை பேணுவது அவர்களின் இயல்பு.
குறவர் இனப் பெண்கள் மணவிலக் குப் பெற இயலும். பஞ்சாயத்துக் கூடி இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி, ஒன்றுசேர்க்க முயற்சிப்பார்கள். அது சாத்தியமாகாத நிலையில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்து ஆளுக்கொரு வைக் கோலை எடுத்து, மூன்றாக முறித்து அந்த தண்ணீரில் போடச் செய்வார்கள். அவ்வளவுதான், அவர்களுக்குள்ளான மணஉறவு முறிந்துவிட்டதாக அர்த்தம்!
திருமணத்துக்குப் பிறகு ஒரு வருட காலத்துக்கு ஆண் வீட்டில் பாதிநாளும், பெண் வீட்டில் பாதி நாளும் மணமக்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு தனியே வாழலாம். நரிக்குறவ மக்கள் பெண் குழந்தை பிறந்தால் கொண் டாடுவார்கள். பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள, மாப்பிள்ளைதான் பெண் ணுக்கு வரதட்சணைத் தர வேண்டும். கல்யாணச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மாப்பிள்ளைக்கு சாமிச் சொத்து இருக்க வேண்டும்.. சாமிச் சொத்து என்பது மூதாதையர்கள் கொடுத்துப் போன சாமிப் பொருட்களாகும். அதா வது, வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுச் சாமான்கள். இதை புனிதமாக வைத்து பாதுகாத்து வருவார்கள்.
குடிப்பதும், சினிமா பார்ப்பதும் அவர் களின் விருப்பமான பொழுதுபோக்கு கள். தங்களுக்கு என நிறைய கட்டுப்பாடுகள், ஒழுக்கவிதிகளைக் கொண்டவர்கள் அவர்கள். வயதான குறவர்களைப் பராமரிக்க வேண்டியது மகனின் கடமை. இறந்தவர்களை ரகசிய மாக புதைத்துவிட்டு போய்விடுவார்கள் என பிலோ இருதயநாத் குறிப்பிடுகிறார்.
குறவர்களின் இன வரலாறு குறித்து அதில் ஆய்வுபூர்வமான தகவல்கள் இல்லை. இதற்காக மானுடவியல்துறை யில் ஆய்வு செய்யும் ஒரு நண்பரைத் தொடர்புகொண்டபோது, ’கரசூர் பத்மபாரதி’ எழுதிய ’நரிக்குறவர் இனவரைவியல்’ என்கிற நூலை வாசிக்கக் கொடுத்தார்.
முனைவர் பத்மபாரதி நெடுங்கால மாக நரிக்குறவர்களுடன் பழகி, அவர் களின் வாழ்க்கைமுறையைத் துல்லிய மாக எழுதியுள்ளார். ‘தமிழினி பதிப்பகம்’ இதை 2004-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
குறவர்களின் இன வரலாறு, அவர் களின் சமூக அமைப்பு, பயன்படுத்தும் பொருட்கள், பொருளாதார நிலை, திருமணம் மற்றும் சடங்குகள், சமய நம்பிக்கைகள், பஞ்சாயத்து, மருத்துவமுறை, நம்பிக்கைகள் என 11 தலைப்புகளில் விரிவான தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது இந்த நூல்.
நரிக்குறவர்கள் கல்வியாலும், பொருளாதாரத்தாலும் மிகவும் பின் தங்கியவர்களாகவே இன்றைக்கும் இருக்கிறார்கள். இவர்களுக்கு என ‘நலவாரியம்’ அமைக்கபட்டுள்ள போதும், உயர்கல்வி பெறுவதிலும் வேலைவாய்ப்பிலும் இன்னமும் அதிக வளர்ச்சி அடையவில்லை.
மராட்டிய மாமன்னர் சிவாஜியின் படையில் வீரர்களாக நரிக்குறவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். சிவாஜிக் கும் முகலாயர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் சிவாஜி தோற்றுப் போனதால், அவரது படைவீரர்கள் முகலாயர்களால் பிடிக்கபட்டு அடிமைக ளாக மாற்றப்பட்டார்கள். முகலாயப் படையின் கையில் அகப்படாமல் தப்பி காட்டுக்குள் புகுந்தவர்கள், தென்னிந் தியாவுக்கு குடிவந்தனர் என்றொரு கருதுகோளும் இருக்கிறது.
மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்து கி.பி. 6 அல்லது 7-ம் நூற்றாண்டுகளில்தான் இவர்கள் தமிழகத்தில் குடியேறியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது
நரிக்குறவர்கள் சிவனை முதற்கடவு ளாகக் கொண்டாலும் காளியம்மன், மாரியம்மன், துர்க்கை போன்ற பெண் கடவுளர்களையும் வணங்குகிறார்கள். எருமையைப் பலியிடுவது அவர்களின் வழக்கம்.
குறவர் சமூகத்தினுள் எருமை பலியிடுவோர், ஆடு பலியிடுவோர் என்று இரண்டு பெரும்பிரிவுகள் இருப்பினும் அதிலும் உட்பிரிவுகள் உண்டு. குறவர்களின் சமையல் தனி ருசி கொண்டது. கறியை வேகவைத்து அதை சோற்றுடன் பிசைந்து சாப்பிடுவார்கள். அவர்களில் யாராவது இறந்துபோனால் அதே இடத்தில் ரகசியமாக புதைத்து விட்டு போய்விடுவது போன்ற நரிக் குறவர்களின் பண்பாட்டுக்கூறுகளை சுவாரஸ்யமாக, துல்லியமாக விளக்கு கிறார் பத்மபாரதி.
நரிக்குறவர்கள் தற்போது மிகவும் பிற்படுத்தபட்டவர்கள் பட்டியலில் உள்ளார்கள். அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
‘நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க
ஆனா - நரி போல வஞ்சனைகள் செய்ய மாட்டோம்
பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க
ஆனா - காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்’
- என சினிமா பாடல் ஒன்றில் குற வனும் குறத்தியும் ஆடிப் பாடுவார்கள். அது வெறும் பாடல் மட்டுமில்லை; அவர்களின் வாழ்க்கை நெறி!
- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைத் தெரிவிக்க: writerramki@gmail.com
முந்தைய அத்தியாயம்: >வீடில்லா புத்தகங்கள் 35: இமயக் காட்சிகள்!